July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபுவை அரசு பரிந்துரைக்க ‘சமூக நீதி’யே காரணம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

1 min read

Govt nominates Shailendra Babu for TNPSC chairmanship because of ‘social justice’: RSBharti interview

22.8.2023
“சமூக நீதியின் அடிப்படையில், இதுவரையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் நியமிக்கப்படாத ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவரை தமிழக அரசு பரிந்துரைத்தது. அதை ஆளுநர் புறக்கணித்திருப்பது கண்டனத்துக்குரியது” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சைலேந்திபாபு

முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மேலும் 7 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் தெரிவு செய்யப்பட்டதில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றுள்ளதா என்பது உள்பட ஆளுநர் ரவி சில கேள்விகளை அரசுக்கு முன்வைத்து கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டிருந்த சைலேந்திர பாபுக்கு தற்போது வயது 61. அவர் கடந்த ஜூன் 30 அன்று தமிழக டிஜிபியாக ஓய்வு பெற்றார். டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் ஓய்வுக்கான உச்ச வரம்பு 6 ஆண்டுகள் அல்லது 62 வயது. இதனை சுட்டிக்காட்டி சைலேந்திர பாபு இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது மற்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று வெளியான விளம்பரத்தின் வெளிப்படைத்தன்மை ஆகியனவற்றை சுட்டிக் காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி சில கேள்விகளை எழுப்பியதாகத் தெரிகிறது.

அதாவது, விளம்பரம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை, அவை எவ்வாறாக பரிசீலனை செய்யப்பட்டன, எதன் அடிப்படையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன ஆகிய விவரங்கள் ஆளுநரால் கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
டிஎன்பிஎஸ்சி என்பது ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் கொண்ட ஆணையம். இவர்கள் அனைவருமே அரசியல் சாசன சட்டப் பிரிவுகள் 316 – 319 வரை வழங்கியுள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.பாரதி

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
கருணாநிதி முதல்வராக இருந்த காலக்கட்டத்தில், ஒதுக்கப்பட்ட அல்லது பிரதிநிதித்துவம் இல்லாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பதவிகள் வழங்க வேண்டும் என்று எண்ணினார். அதே நோக்கத்துடன்தான், இன்றைக்கு டிஎன்பிஎஸ்சி தலைவராக இதுவரை எந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவில்லையோ, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை மறைந்த முதல்வர் கருணாநிதியின் வழியிலே தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்து ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியிருக்கிறார்.

1930-ல் இருந்து டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டவர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில், எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இதுவரை தலைவர் பதவிக்கு வரவில்லையோ, அந்த சமுதாயத்தில் இருந்து ஒருவரான ஓய்வுபெற்ற டிஜிபியும், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி, எந்தவிதமான விமர்சனத்துக்கும் உள்ளாகாமல் தன்னுடைய பணியை செய்த, அனைத்து தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சைலேந்திர பாபுவை தமிழக அரசு பரிந்துரைத்து ஆளுநருக்கு அனுப்பியது.

ஆனால், அதை ஏற்றுக்கொள்ள ஆளுநர் மறுப்பது ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான். டிஎன்பிஎஸ்சியில் கடந்த காலங்களில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. உச்ச நீதிமன்றம் வரை சென்று அந்த முறைகேடுகள் எல்லாம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இனிவரும் காலங்களில் அதுபோல இருக்கக்கூடாது என்பதற்காக காவல்துறையில் டிஜிபியாக இருந்து ஓய்வுபெற்ற ஒருவரை தமிழக அரசு பெருந்தன்மையுடன் நியமித்து அனுப்பியது. அதை ஆளுநர் புறக்கணித்திருப்பது கண்டனத்துக்குரியது.

சமூக நீதியின் அடிப்படையில், இதுவரையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் நியமிக்கப்படாத ஒரு சமூகத்தைச் சேர்ந்தவரை தமிழக அரசு நியமித்திருக்கிறது. எனவே இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு ஆளுநர் மறுபரிசீலனை செய்து ஆளுநர் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

அதேபோல், இன்றைய தினம் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. ஆளுநர் தனது முகநூலில் ‘மெட்ராஸ் டே’ என்று பதிவிட்டுள்ளார். மெட்ராஸ் என்ற பெயரை மாற்றி ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆகிறது. அதன்பிறகும் ஆளுநர் மெட்ராஸ் என குறிப்பிடுவது தமிழக மக்களை சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆளுநர் செயல்படுகிறார்.

தமிழ்நாடு என்று சொல்லவும் மறுக்கிறார். சென்னை என்று சொல்லவும் மறுக்கிறார். அதுபோல், தமிழக அரசு கொண்டுவந்துள்ள பாடத்திட்டத்தைப் பின்பற்றக் கூடாது என்ற உத்தரவையும் பல்கலைக்கழகங்களுக்கு பிறப்பிக்கப்போவதாக கூறியிருக்கிறார். எனவே, ஆளுநர் திட்டமிட்டு ஒரு சதியை, குழப்பத்தை உருவாக்குவதற்காக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கைகளை தமிழக மக்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள். இதற்கு உரிய விலையை ஆளுநர் ரவி தர வேண்டியது இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.