சந்திரயான்-3 திட்டத்தை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு
1 min read
Case registered against actor Prakash Raj for criticizing Chandrayaan-3 project
23.8.2023
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் -3 விண்கலத்தைசெலுத்தியது. இந்த விண்கலம் நிலவு குறித்த ஆய்வில் திருப்பு முனையாக கருதப்படுகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வாளர்களும் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த திங்கட்கிழமை எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக வலைத்தள பக்கத்தில் சந்திரயான்-3 திட்டத்தைவிமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், ‘‘வாவ், நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம்” என குறிப்பிட்டு ‘ஒருவர் தேநீர் ஆற்றும்’ புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இந்த பதிவில் அவர் மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்வதாக பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஹனுமன் சேனா அமைப்பின் நிர்வாகி பிரமோத், நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக பனஹட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பிரகாஷ் ராஜ் மீது போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கு பிரகாஷ் ராஜ், ”வெறுப்பை விதைப்பவர்களுக்கு எல்லாமே வெறுப்பாகவே தெரிகிறது. நான் கேரளாவை சேர்ந்த டீக்கடைக்காரர் ஒருவரின் கார்ட்டூனை பதிவிட்டு இருந்தேன். ஒரு நகைச்சுவை காட்சியை பகிர்ந்தால் அதை தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். பாஜகவினரும் இந்து அமைப்பினரும் நகைச் சுவையை நகைச்சுவையாக கடந்து செல்ல பழக வேண்டும்” என விளக்கம் அளித்துள்ளார்.