July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

34 படிகளை 4 நிமிடத்தில் ஏறி 10 மாத விருதுநகர் சாதனை

1 min read

Climbing 34 steps in 4 minutes is a 10-month Virudhunagar record

23.8.2023
34 படிகளை 4 நிமிடத்தில் ஏறிய 10 மாத விருதுநகர் குழந்தை, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது

இரட்டைக் குழந்தைகள்

விருதுநகர் சுலோச்சனா தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரன், தனியார் சிமெண்டு ஆலையில் விற்பனை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி குருசரண்யா. ஆசிரியையாக வேலை பார்த்து தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். அவர்கள் 11 மாதங்களே ஆன கைலன் பார்த்தசாரதி, அதியன் பார்த்தசாரதி. இதில் அதியன் பார்த்தசாரதி எப்போதும் துருதுரு குழந்தையாக வளர்ந்து வந்துள்ளான். இதனால் கைலன் பார்த்தசாரதியை விட அதியன் பார்த்தசாரதி மீது அதிக கவனம் செலுத்தி வந்தனர்.
முதல் மாடியில் வசித்து வரும் இவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி வீட்டை எப்போதும் பூட்டியே வைத்துள்ளனர்.

இதற்கிடையே மகேஸ்வரன் வேலைக்கு செல்லும் போது பின்தொடர்ந்து வேகமாக தவழ்ந்து வரும் இளைய மகன் அதியன் பார்த்தசாரதிக்கு பலகையால் தடுப்பு போட்ட பின்னரே அவர் புறப்பட்டு செல்வார்.
இரட்டை குழந்தைகளுக்கு 10 மாதங்கள் ஆன நிலையில் அதியன் பார்த்தசாரதி தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு, வேகமாக தவழ்ந்து சென்று தடுமாறி விழுவதும் வாடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த குழந்தை வீட்டின் 2-வது மாடிக்கு ஏற முயன்றுள்ளான். முதலில் தடுத்த பெற்றோர் அவனது தைரியத்திற்கு ஊக்கம் கொடுத்தனர். அதன் பயனாக 34 படிகளை 10 மாத குழந்தை அசாதாரணமாக 4 நிமிடங்களில் ஏறியது.
இதனை வீடியோவாக பதிவு செய்த குழந்தையின் பெற்றோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அத்துடன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான முயற்சியிலும் இறங்கினர்.

ஆனால் அவர்களது முயற்சிக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. பலரது பெற்றோர் இது மிகவும் ஆபத்தானது. சமூக வலைதளங்களில் பார்க்கும் மற்ற குழந்தைகளும் இதற்கான முயற்களில் ஈடுபடும் போது உயிருக்கு உலை வைக்கும் நிகழ்வாக மாறிவிடும். உடனடியாக இந்த பதிவினை அழியுங்கள் என்று கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனாலும் குழந்தையின் முயற்சியை ஊக்கப்படுத்த நினைத்த பெற்றோர் நோபிள் உலக சாதனை புத்தகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட அந்த நிறுவனத்தார் இந்த அரிய முயற்சியை அங்கீகரித்ததோடு, சான்றிதழும் வழங்கி கவுரவித்துள்ளது.
இதுபற்றி இரட்டை குழந்தைகளின் தாய் குருசரண்யா கூறியதாவது:-

முதலில் குழந்தையின் இந்த செயல் விபரீதமாக தோன்றினாலும், அதன் தைரியத்தை என்னால் தடுக்க முடியவில்லை. எந்த ஒரு குழந்தையும் தனக்கு பின்னால் பெற்றோர் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் தான் தனது சேட்டைகளை ஆரம்பிக்கின்றன. நீச்சல் பழக செல்லும் போதும், சறுக்கில் ஏறி விளையாடும்போதும் என பல்வேறு நிகழ்வுகளில் அப்பா, அம்மா உடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகிறது. அதனால் தான் நாங்கள் துணிந்து இதற்கு அனுமதித்தோம். குழந்தையின் உந்துதலை ஒரு சாதனையாக்கி மற்ற குழந்தைகளுக்கு அதனை வரவழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அதற்கான முயற்சிகளை செய்தோம். வருங்காலத்தில் இன்னும் பல சாதனைகளை எங்கள் குழந்தைகள் செய்வார்கள், அதற்கு பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதாகவே நாங்கள் இதனை பார்க்கிறோம். குழந்தைகளுக்கு என்ன விருப்பமோ அதனை பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும், இயலாததை திணிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.