குற்றாலத்தில் தீ விபத்தில் ரூ. 2 கோடி பொருட்கள் நாசம்
1 min read
In a fire accident in Courtal, Rs. 2 crore items were damaged
26.8.2023
குற்றாலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 கும் மேற்பட்ட கடைகள் சாம்பலானது. இதில் ரூபாய் 2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் தென்காசி, எம்பி, தென்காசி கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
குற்றாலம் தீ விபத்து
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் சீசன் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த சீசன் காலங்களில் குற்றாலநாதர் கோவிலைச் சுற்றி தற்காலிக கடைகள் அமைப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுவது வழக்கம். ஏலம் எடுத்தவர்கள் குற்றாலநாதர் தெற்கு பிரகாரம், வடக்கு மற்றும் கீழ்பிரகாரம் பகுதியில் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர். விதிமுறைகள் மீறி கோவிலைச் சுற்றி இடைவெளி இன்றி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சீசன் ஜூலை மாதம் தான் துவங்கியது.
ஆனால் இ;ம்மாதம் முதல் வாரத்திலேயே சீசன் நிறைவு பெற்றுவிட்டது.தற்போது
குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் மட்டும் மிகவும் குறைவாக தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து விட்டது. குற்றாலநாதர் கோவில் தெற்கு பிரகாரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் பிற்பகல் 2.30 மணி அளவில் ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்துள்ளது.
இதனால் கடையில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். காற்று வேகமாக வீசியதாலும் தொடர்ந்து இடைவெளி இன்றி கடைகள் இருந்ததாலும் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ மளமளவென பரவியது. இதனால் கடை வியாபாரிகள் பொருட்களை அப்படியே போட்டு விட்டு தப்பி ஓடினர்.
கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சில கடைகளில் வைக்கப்பட்டிருந்த 4 கேஸ் சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து சிதறியது. இதனால் மேலும் பல கடைகளுக்கும் அருகில் சிற்றாற்றின் கரை பகுதியில் உள்ள மரங்களிலும் தீ பரவியது.பழமையான பச்சை மரங்கள் தீக்கு இரையாகின. சிலிண்டர்கள் வெடித்தது பெரிய அளவிலான வெடிகுண்டு வெடித்ததை போன்ற சத்தத்தை எழுப்பியதால் வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் பீதி அடைந்தனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் சுரண்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 4 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் 4 புறங்களிலும் நின்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள்சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும் 40 க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. மேலும் 10க்கும் மேற்பட்ட கடைகள் சேதமானது. மேலும் குற்றாலநாதர் கோவில் வளாகம், குற்றாலம் சன்னதி பஜார் உள்ளிட்ட பகுதிகள் புகை மண்டலமாக காணப்பட்டது. கடைகள் தீப்பிடித்து எரிந்ததும், சிலிண்டர்கள் வெடித்ததும் குற்றாலம் பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தை யும் ஏற்படுத்தியது.
போலீசார் தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு பொதுமக்கள் செல்ல விடாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பீதியில் ஓட்டம் படித்தனர். அப்போது குற்றாலம் நகரமே போர்களம் போல் காட்சியளித்தது
இந்த தீ விபத்தில் சேதமான மதிப்பு ரூபாய் இரண்டு கோடிக்கும் மேல் இருக்கும் என வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இனி வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாத வகையில் கடைகள் போதுமான இடைவெளி விட்டு அமைக்கவும், விதிமுறைகளை மீறாமல் இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றாலத்தில் தீ விபத்து நடைபெற்ற பகுதியினை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செகிருஷ்ண முரளி(எ) குட்டியப்பா, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துறை இரவிச்சந்திரன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சங் தென்காசி டிஎஸ்பி நாக சங்கர் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன் தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப் பேரி தி.உதய கிருஷ்ணன் அதிமுக மாவட்டத் துணைச் செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அரசு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்