July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

ஊழல் பற்றி மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா பதிலடி

1 min read

BJP responds to M.K.Stal’s allegation about corruption

27.8.2023
பாஜக மீது முதல் அமைச்சர் கூறிய குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மத்திய அரசின் 7 திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது. பிரதமர் மோடிக்கு ஊழல் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. ஊழலை மறைக்கவே பா.ஜனதா மதவாதத்தை கையில் எடுக்கிறது என்று மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதற்கு பா.ஜனதா உடனடியாக பதிலடி கொடுத்தது. இதுதொடர்பாக தமிழக பா.ஜனதா துணை தலைவர் கரு.நாகராஜன் கூறியதாவது:-

2 ஜி வழக்கு

ஊழலை பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி இல்லை என்று எந்த தகுதியின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார் என்பது புரியவில்லை. ஊழலால் இந்தியாவில் காங்கிரஸ் அரசால் கலைக்கப்பட்ட அரசு தி.மு.க. அரசு. ஊழலுக்காக ஆ.ராசா, கனிமொழியை சிறையில் தள்ளிய அரசு காங்கிரஸ் அரசு. டி.ஆர்.பாலு செய்த ஊழல் காரணமாக 2-வது முறை காங்கிரஸ் அரசில் மந்திரி பதவி வழங்க மறுக்கப்பட்டது.

ஊழல் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதை தாங்கி கொள்ள முடியவில்லை. 2ஜி வழக்கு நாளை (28-ந் தேதி) முதல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஊழல் செய்யாத உத்தமர் வேஷம் போடும் தி.மு.க. 30 ஆயிரம் கோடியை குவித்து வைத்தது பற்றி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லட்டும். அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீது கோர்ட்டே தாமாக முன்வந்து மீண்டும் ஊழல் வழக்கை விசாரிக்கிறதே அது பற்றி பதில் சொல்லட்டும்.

நோபுள் ஸ்டீல் கம்பெனியில் ரூ.1000 கோடி பணம் குவித்தது, மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்த போது மெட்ரோ ரெயில் திட்டத்தில் நடத்திய ஊழலுக்கு பதில் சொல்லட்டும். இதற்கெல்லாம் பதில் சொல்லி தனது தகுதியை மக்கள் மத்தியில் நிரூபித்து விட்டு ஊழலுக்கு எதிராக போராடும் பிரதமர் மோடியை பற்றி பேசினால் நல்லது.
மத்திய அரசின் 7 திட்டங்களில் ஊழல் நடந்து இருக்கிறது என்று வார்த்தை ஜாலம் காட்டி இருக்கிறார். பொதுவாக மத்திய அரசின் திட்டங்களும் மாநில அரசு மூலமாகத்தான் நிறைவேற்றப்படும் என்பதாவது முதலமைச்சருக்கு நினைவில் இருக்க வேண்டும்.
சி.ஏ.ஜி. என்பது என்ன? ஊழல் பற்றி சொல்வதல்ல. திட்டங்களில் தவறு நடந்திருப்பதை அரசுக்கு சுட்டிக் காட்டுவதுதான். ஆயுஷ்மான் பாரத் மருத்துவ திட்டத்தில் 3 ஆயிரத்து 700 லட்சம் பயனாளிகள் பலன் அடைந்து வருகிறார்கள். அதில் போலியாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பதை சுட்டிக் காட்டி உள்ளது. இந்த தவறுகள் சரி செய்யக்கூடியது தான்.
பல ஆயிரம் கோடி வருவாய் வரும் சுங்கச்சாவடிகளில் வருமானம் குறைத்து காட்டப்படுவதாக அரசின் கவனத்துக்கு வந்ததால்தான் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. ‘பாஸ்டேக்’ மூலம் பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட்டது. இந்த மாதிரி நடைபெறும் தவறுகளை சி.ஏ.ஜி. பரிந்துரைப்படி அரசு சீர் செய்கிறது.

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பல லட்சம் போலி நபர்களை காட்டி கோடி கணக்கில் சுருட்டினார்கள். அந்த தவறையும் சி.ஏ.ஜி. தான் சுட்டிக்காட்டியது. அதன் பிறகு ‘ஸ்மார்ட்கார்டு’ திட்டம் கொண்டு வரப்பட்டு தவறுகள் களையப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 17 லட்சம் போலி ரேசன்கார்டுகள் இருந்தது. அதையும் மத்திய அரசு ஒழித்தது. 3 லட்சத்து 80 ஆயிரம் போலி கியாஸ் இணைப்புகள் இருந்ததும் ஒழிக்கப்பட்டது. சி.ஏ.ஜி சுட்டிக்காட்டும் தவறுகள் களையப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் ஆட்களே இல்லாமல் போலியாக பட்டியல் தயாரித்து சம்பளம் போட்டு சிக்கியது யார்? இப்போதும் செய்த ஊழல்கள் அம்பலத்துக்கு வந்துக் கொண்டிருப்பதால் நடுங்குகிறார்கள். அதற்காக தங்கள் வார்த்தை ஜாலத்தால் மிகைப்படுத்தி பார்க்கிறார்கள். தி.மு.க.வின் வாய் ஜாலத்துக்கு மயங்கிய காலம் மாறிவிட்டது என்பதை மு.க.ஸ்டாலின் புரிந்துக்கொள்ள வேண்டும்.
அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் அரசு மிரட்டவில்லை. அதைப் பார்த்து மிரண்டு போயிருப்பதால் அரண்டு போய் எதையாவது பேசுகிறார்கள். மக்களுக்கு எல்லாம் புரியும். பா.ஜனதா மீது மதவாத முத்திரை குத்த முனைவது உங்கள் முகத்தில் நீங்களே கரி பூசுவது போல்தான். உங்கள் போலி மதவேசம் கலைந்துபோனது. இந்தியா கூட்டணி மட்டுமல்ல எந்த கூட்டணி வந்தாலும் சரி இந்தியர்கள் மோடியின் பக்கம் இருப்பார்கள். இந்தியா பாதுகாப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.