திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு
1 min read
Minister M. Subramanian’s action order at Vektionvilai Primary Health Center
27.8.2023
நெல்லை மாவட்டம் திசையன்விளை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர் உள்ளிட்டோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பதிவேடுகள், மற்றும் மாத்திரை மருந்துகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
உத்தரவு
அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியர் ஒருவர் மட்டுமே பணியில் இருந்தார். இதைத்தொடர்ந்து, இன்று பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் மற்றும் பணியாளர்கள் குறித்த விவரங்களை தொலைபேசி மூலம் தெரிந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், பணி நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பணியில் இல்லாத மருத்துவர், மருந்தாளுநர், மருத்துவமனைப் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறையின் துணை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை வாகனத்தில் முறையாக பாதுகாப்பின்றி மருந்துப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், இதுகுறித்து செவிலியரிடம் விசாரித்தபோது, வாகன ஓட்டுநர் பணிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. வாகன ஓட்டுநர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார்.
பின்னர், பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், பாம்பு கடி மற்றும் நாய் கடி மருந்து இருப்பு குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அமைச்சரின் திடீர் ஆய்வால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.