July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

மகளிர் உரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது: நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்

1 min read

Banks should not deduct women’s rights: Finance Minister Thangam Thanaras

17.9.2023
“தமிழக அரசு மகளிரின் நல்வாழ்வுக்காக வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை, வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்பது குறித்து ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும்” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் 1.065 கோடி மகளிருக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கும் நிகழ்வை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். திட்டத் தொடக்கத்தின் முதல் நாளே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் வங்கிக் கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது ஒரு மகத்தான சாதனை நிகழ்வாகும். இது குறித்து நாடே பாராட்டுகிறது. தமிழகத்தின் இத்திட்டத்தைப் பற்றி மற்ற மாநிலங்களும் வியந்து பாராட்டி வருகின்றன.

இந்நிலையில் ஆங்காங்கே சில குறைகள் அரசின் கவனத்துக்கு வந்துள்ளன. மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமை தொகையை வங்கிக்கான சேவை கட்டணம், ஏற்கெனவே வாங்கிய கடன் ஆகியவற்றுக்கு சில வங்கிகள் நேர் செய்து கொள்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும். இதுகுறித்து மாநில வங்கிகள் குழுமத்தின் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில வங்கிகளில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாக செலவினங்களுக்கு நேர் செய்யக்கூடாது என்று மாநில அரசுக்கும் வங்கிகளுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தங்களை மீறும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மகளிரின் நல்வாழ்வுக்காக தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை, வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்பது குறித்து ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும். மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து புகார் அளிப்பதற்கு முதல்வரின் முகவரி உதவி மைய தொலைபேசி எண் 1100- ஐ அழைத்து புகார் அளிக்கலாம். மகளிர் அளிக்கப்படும் இப்புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.