‘அண்ணா மற்றும் கருணாநிதியின் ஆட்சியைப் போல எனது ஆட்சியும்பெரியாருக்கே காணிக்கை”: முதல்வர் ஸ்டாலின்
1 min read
‘Like Anna’s and Karunanidhi’s, my regime is a tribute to Priya’: CM Stalin
17.9.2023
“அண்ணா, கருணாநிதி ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பெரியார் பிறந்தநாள்
தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம். மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து, மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர்.
தாம் எண்ணியவை எல்லாம் சட்டவடிவம் பெறுவதைப் பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது. பெண் விடுதலைக்காகவும், சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே! அண்ணா, கருணாநிதி ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மரியாதை
முன்னதாக, தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி வேலூர் அண்ணா சாலையில், உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவபடத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், ஆர்.காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழியை படிக்க அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.