October 2, 2023

Seithi Saral

Tamil News Channel

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்

1 min read

Women’s Reservation Bill tabled in Lok Sabha

19.9.2023
சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழி செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம்

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முன்னதாக, இன்று காலை நாடாளுமன்றம் பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் கூடியது. அப்போது, பழைய நாடாளுமன்றத்தில் இருந்து விடை பெறும் முன்பாக அதன் பெருமைகள் குறித்த மலரும் நினைவுகளை தலைவர்கள் பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து, இன்று பிற்பகல் நாடாளுமன்றம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தொடங்கியது.

மகளிர் இட ஒதக்கீடு

சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும் முதல் நிகழ்வாக, மகளிருக்கு சட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசினார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்று அப்போது அவர் கோரிக்கை விடுத்தார்.

மசோதாவுக்கு ஆதரவாகப் பேசிய பிரதமர் மோடி, “பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. எனினும், பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மசோதா நிறைவேறாமல் போனது. எனவே, அந்தக் கனவு இன்னமும் அப்படியே நீடிக்கிறது. இன்று, இதை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை கடவுள் நமக்குக் கொடுத்துள்ளார். எனவே, பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நமது அரசு தற்போது கொண்டு வந்துள்ளது. ஜனநாயகத்தை வலுப்படுத்த உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்த நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாநிலங்களைவையில் இந்த மசோதா ஒப்புதல் பெற்றுள்ளது என்பதால், இனி மக்களவையில் ஒப்புதல் பெற வேண்டியது இருக்கும். திருத்தங்கள் இருப்பினும், அந்தத் திருத்தங்களுக்கு மாநிலங்களைவையில் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் ஏற்படும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.