May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

அ.தி.மு.க.வுடன் கூட்டணி தமிழக பா.ஜ.க.வின் எதிர்காலத்துக்கு நல்லது– நிர்மலா சீதாராமன் கருத்து

1 min read

Alliance with ADMK is good for the future of Tamil Nadu BJP– Nirmala Sitharaman

1.10.2023
அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால்தான் தமிழக பா.ஜ.க.வின் எதிர்காலத்துக்கு நல்லது என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

அ.தி.மு.க. கூட்டணி

பாரதிய ஜனதாவுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க. திட்டவட்டமாக அறிவித்திருப்பது பா.ஜ.க. டெல்லி மேலிட தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு மிகப்பெரிய தோழமை கட்சியாக இருந்தது அ.தி.மு.க. மட்டுமே. அந்த கட்சியும் விலகி சென்றதை பா.ஜனதா இழப்பாக கருதுகிறது. எனவேதான் ரகசியமாக சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த முயற்சிகள் தோல்வி அடைந்ததும், தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி இடையே கசப்புணர்வு வருவதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை அறிய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பொறுப்பை ஒப்படைத்தனர். இதையடுத்து நிர்மலா சீதாராமன் தமிழக பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

ஒவ்வொரு பா.ஜ.க. நிர்வாகியிடமும் நிர்மலா சீதாராமன் பல்வேறு கேள்விகளை எழுப்பி தகவல்களை திரட்டினார். அதன் அடிப்படையில் அவர் அறிக்கை ஒன்றை தயாரித்தார். அந்த அறிக்கையை அவர் கடந்த வெள்ளிக்கிழமை பா.ஜ.க. மேலிடத்தில் ஒப்படைத்தார்.
அந்த அறிக்கையில் அவர் பல்வேறு தகவல்களை சுட்டிக்காட்டி உள்ளார். குறிப்பாக அ.தி.மு.க. கூட்டணி மற்றும் பா.ஜனதா எதிர்காலம் ஆகியவை தொடர்பாக நிர்வாகிகளின் ஒட்டுமொத்த கருத்துக்களை அந்த அறிக்கையில் நிர்மலா சீதாராமன் பிரதிபலித்துள்ளார்.

குறிப்பாக அ.தி.மு.க. கூட்டணி பற்றி விரிவான தகவல்களை அந்த அறிக்கையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருப்பது தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் அது பா.ஜனதாவுக்கு பயனுள்ளதாக இருக்கும். இல்லையெனில் தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்காமல் போகலாம் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் அ.தி.மு.க. கூட்டணிக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுவரை அ.தி.மு.க.வையோ, அ.தி.மு.க. தலைவர்களையோ விமர்சிக்கக் கூடாது. கட்சிப்பணிகளை மட்டும் தமிழக பா.ஜனதாவினர் மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் பரிந்துரைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை

அ.தி.மு.க.வுடன் கூட்டணியை புதுப்பித்துக்கொள்ள மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு தொடர்பாக சுமூக முடிவுகளை எட்ட செய்யலாம். அதை விடுத்து அ.தி.மு.க. தலைவர்களை காயப்படுத்தும் வகையில் விமர்சனம் செய்யக்கூடாது என்பதை தமிழக பா.ஜ.க.வுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மேலும் அ.தி.மு.க. ஏதேனும் நிபந்தனை விதித்தால் அது தொடர்பாக பரிசீலனை செய்யலாம். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால்தான் தமிழக பா.ஜனதாவுக்கு நல்லது என்று நிர்மலா சீதாராமன் தனது அறிக்கையில் பரிந்துரைகள் செய்திருப்பதாக தெரிகிறது.

நிர்மலா சீதாராமனின் அறிக்கையை பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் ஆய்வு செய்தனர். அ.தி.மு.க. கூட்டணி முறிவதற்கு காரணம் என்ன என்பதையும் தெரிந்து கொண்டனர். இதை தொடர்ந்துதான் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை டெல்லிக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

அண்ணாமலையிடம் பல்வேறு தகவல்களை தெரிவிக்க பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

அமித்ஷா, நட்டா ஆகிய இருவரும் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் அண்ணாமலையின் செயல்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நிர்மலா சீதாராமனின் அறிக்கை தகவல்கள் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழக பா.ஜ.க.வுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.