சிவகிரி: லோடு ஆட்டோவில் கடத்தி வந்த 105 கிலோ கஞ்சா பறிமுதல்
1 min read
105 kg of ganja smuggled in a loaded auto through Sivagiri check post seized
8/10/2023
சிவகிரி சோதனை சாவடி வழியாக லோடு ஆட்டோவில் கடத்தி வந்த 105 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா
ஓசூரில் இருந்து ஒரு மினி லோடு ஆட்டோவில் உருளை கிழங்கு ஏற்றிக் கொண்டு 2 பேர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக தென்காசி மாவட்டத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி சோதனை சாவடியில் இன்று காலை அவர்கள் வந்தபோது, அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி தலைமையிலான போலீசார் லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் உருளைகிழங்கு மூட்டைகள் அழுகிய நிலையில் இருந்தது.
அழுகிய உருளை கிழங்கு மூட்டைகளை அவ்வளவு தொலைவில் இருந்து இங்கு கொண்டு வந்தது குறித்து போலீசார் அந்த லோடு ஆட்டோ டிரைவர் மற்றும் கிளீனரிடம் விசாரித்துள்ளனர். அப்போது 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உருளை கிழங்கு மூட்டைகளை இறக்கி பார்த்துள்ளனர். அப்போது அதில் மூட்டைகளுக்கு நடுவில் ஏராளமான பொட்டலங்கள் இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது, அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே தப்பியோட முயன்ற டிரைவர், கிளீனரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்ததோடு, அதில் இருந்த சுமார் 105 கிலோ கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றினர். சினிமா பாணியில் காய்கறி மூட்டைகளுக்கு நடுவில் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து 2 பேரும் கடத்தி வந்துள்ளனர்.
ஓசூரில் இருந்து தென்காசி வரையிலும் ஏராளமான போலீஸ் சோதனை சாவடிகள் இருக்கும் நிலையில், அவற்றில் எல்லாம் போலீசிடம் சிக்காமல் கஞ்சாவை அவர்கள் கடத்தி வந்துள்ளனர்.
தற்போது பிடிபட்ட டிரைவர், கிளீனர் ஆகியோர் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்தனர்? எங்கு கொண்டு செல்கிறார்கள்? என்பது குறித்து 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.