ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் 2000 பேர் பலி
1 min read
2000 killed in earthquake in Afghanistan
8.10.2023
ஆப்கானிஸ்தானில் நடந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2000 பேர் பலியானார்கள். 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்தன
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக மீண்டும் 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் அந்த மையம் கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் நேற்று மட்டும் 320-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர். மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஜிந்தா ஜன் மற்றும் கோரியான் மாவட்டங்களில் 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜிந்தா ஜன் மாவட்டத்தின் 3 கிராமங்களில் மட்டும் 15 பேர் இறந்துள்ளனர். 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பரா மற்றும் பத்கிஸ் பகுதிகளில் சில வீடுகள் முற்றிலும் அழிந்து விட்டன. ஹெராத் பகுதியில் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. சுவர்களிலும் விரிசல்கள் விழுந்துள்ளன. நிலநடுக்கம் காரணமாக உயரமான கட்டிடங்களில் இருந்து ஏராளமானோர் வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
2 ஆயிரம் பேர் பலி
நேற்று 2-வது நாளாக மீட்புபணி தொடர்ந்து நடந்தது. மீட்பு பணியின் போது பிணங்களாக வந்து கொண்டிருந்தன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்பட்டது.
இந்த நிலையில் நிலநடுக்கத்துக்கு இதுவரை 2000 பேர் பலியாகி உள்ளனர். இதை தலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதுபற்றி ஹெராத் மாகாண பேரிடர் நிவாரண அதிகாரி மூசா ஆஷாரி கூறும்போது, ‘நிலநடுக்கத்திற்கு இதுவரை பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார்.
உலக சுகாதார அமைப்பு
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜெண்டா ஜன் நகரில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 12 ஆம்புலன்சுகளை உலக சுகாதார அமைப்பு அனுப்பியுள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், ‘ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உலக சுகாதார அமைப்பின் குழுவினர் ஆஸ்பத்திரிகளுக்கு விரைந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்’ என்று கூறப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தி வரும் தலிபான்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு உள்ளூர் அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது’ என்று கூறியுள்ளனர்.