நாளை அரிய சூரிய கிரகணம்- இந்தியாவில் தெரியாது
1 min read
Rare solar eclipse tomorrow – not known in India
13.10.2023
178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் நாளை அரிய சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆனால் இது இந்தியாவில் தெரியாது.
கிரகணங்கள்
சூரியன் – சந்திரன் – பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது. நெருப்பு வளைய சூரிய கிரகணத்தின் போது சந்திரன் சூரிய ஒளிவட்டத்தின் பெரும்பகுதியை மறைத்து, சந்திரனின் விளிம்புகளைச் சுற்றி சூரிய ஒளி போன்ற ஒரு வளையம் மட்டுமே தெரியும். அந்த நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து, சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
சூரிய கிரகணம்
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை நிகழ உள்ளது. மிகவும் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் வானில் தோன்ற உள்ளது. இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவின் சில பகுதிகள், மெக்சிகோ, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் பல நாடுகளில் நெருப்பு வளைய கிரகணமாக தெரியும். இந்த நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் இந்த அரிய நிகழ்வை காண முடியும்.
சூரிய கிரகணத்தை நாசா நேரடி ஒளிபரப்பு செய்வதால் உலகின் எந்த மூலையில் வசிப்பவர்களும் நாசா இணைய தளத்தில் காணலாம். இந்த நிகழ்வை காண வானியல் ஆர்வலர்களும், பொதுமக்களும் ஆர்வமாக உள்ளனர்.
இந்தியாவில் தெரியாது
இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இந்திய நேரப்படி, நாளை இரவு 8.34 மணி முதல் நள்ளிரவு 2.25 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளதால், இந்தியாவில் கிரகணத்தை பார்க்க முடியாது.
மகாளய அமாவாசை
பித்ரு அமாவாசை எனப்படும் மகாளய அமாவாசை தினத்தில் கிரகணம் ஏற்படுவது சிறப்புக்குரியது. ஜோதிட சாஸ்திரத்தில் கிரகணத்தை மனித வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி பலன் கூறப்படுகிறது. 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த அரிய கிரகணம் நிகழ்வதால் இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. பல ஆண்டுகாலத்திற்கு புண்ணியத்தையும் முன்னோர்களின் ஆசியையும் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து வரும் 28ம் தேதி சந்திர கிரகணமும் ஏற்படுகிறது.
சூதக் காலம்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, அசுபமானதாகக் கருதப்படும் ‘சூதக்’ காலம் சூரிய கிரகணத்திற்கு 12 மணி நேரத்திற்கு முன்பே தொடங்குகிறது. இதேபோல் சந்திர கிரகணத்திற்கு 9 மணி நேரத்திற்கு முன்பு சூதக் காலம் தொடங்குகிறது. இந்த காலத்தில் கோவில்களுக்குச் செல்லவோ அல்லது குறிப்பிடத்தக்க சுபகாரிய பணிகளை தொடங்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.