டெல்லியில் இன்று மாலை நில அதிர்வு;பொதுமக்கள் பீதி
1 min read
Earthquake in Delhi this evening; public panic
15/10/2023
தலைநகர் புது டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள நகர்புற பகுதிகளில் இன்று மிதமான நில அதிர்வு உணரப்பட்டது.
இன்று மாலை 04:08 மணியளவில் அரியானா மாநிலத்தின் பரிதாபாத் நகரிலிருந்து கிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில், டெல்லிக்கு தென்கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு மையம் கொண்டிருந்தது. இந்த அதிர்வு, ரிக்டர் அளவுகோளில் 3.1 என பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி சாலைகளில் கூடி விட்டனர்.
இது குறித்து அவசர கால பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ள டெல்லி காவல்துறை, லிஃப்டை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும், கட்டிடங்கள், மரங்கள், சுவர்கள், தூண்கள் ஆகியவற்றின் அருகே நிற்காமல் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. டெல்லி காவல்துறை, அவசர உதவிக்கு 112 எனும் எண்ணை அழைக்குமாறு பொதுமக்களை கோரியுள்ளது. இத்துடன் நில அதிர்வு காலங்களில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது.
புது டெல்லி மட்டுமின்றி வட இந்தியாவின் சில பகுதிகளிலும் இது உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் டெல்லியில் இம்மாதம் இது இரண்டாவது முறையாக நடைபெறும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாத தொடக்கத்தில் டெல்லியை உள்ளடக்கிய வட இந்திய பகுதிகளில் அடுக்கடுக்காக ஏற்பட்ட நில அதிர்வுகள் அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவானது குறிப்பிடத்தக்கது.