November 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் கூட்டுறவு துறை சார்பில் ரூ 2.23கோடி கடன் உதவி

1 min read

Loan assistance of Rs 2.23 crore on behalf of Cooperative Department in Tenkasi

27.10.2023
தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் கலைஞர் நுாற்றாண்டு – சிறப்பு கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கூட்டுறவு துறை மூலம் சிறப்பு கடன் வழங்கும் விழா நன்னகரம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் முன்னிலை வகித்தார். தென்காசி மண்டல இணைப்பதிவாளர் கு.நரசிம்மன் வரவேற்று பேசினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் மகளிர் சுய உதவிக்குழு கடன், விவசாய பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், அடமான கடன் மற்றும் சிறு வணிக கடன் உட்பட ரூபாய் 2 கோடியே 23 இலட்சம் மதிப்பில் 52 பயனாளி களுக்கு கடன்களுக்கான காசோலைகளை வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் பேசியதாவது;-

தென்காசி மாவட்டத்தில் 87 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 1 நகர கூட்டுறவு கடன் சங்கம், 4 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 2 வேளாண் விற்பனை சங்கங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 16 கிளைகள் மூலமாக பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் நகர்ப்புற மக்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய நலிவுற்ற மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் கூட்டுறவு இயக்கம் சேவை செய்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் நாளது தேதி வரை 7213 விவசாயிகளுக்கு ரூ.90 கோடிக்கு வட்டி இல்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் கால்நடை பராமரிப்பு கடன் 4686 நபர்களுக்கு ரூ.30 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தென்காசி மாவட்டத்தில் இதர வகை கடன்களாக நடப்பு நிதியாண்டில் 89 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.32.48 இலட்சமும், 102 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.27.48 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வீடு அடமானக் கடனாக 43 நபர்களுக்கு ரூ.21.50 இலட்சமும் கடன் வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 4 மருந்தகங்கள் துவக்கப்பட்டு குறைந்த விலையில் 20 சதவீதம் தள்ளுபடியில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் பொது சேவை மையங்கள் மூலமாக கிராம மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் தொடர்பான மின்னணு சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டில் இதுவரை 46818 சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
இங்கு வருகை தந்துள்ள கூட்டுறவு நிறுவனங்களின் உறுப்பினர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல் பட்டு கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு சங்கத்திற்கு வருகை தரும் சங்க உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும், பாராட்டையும் பெறுகின்ற வகையில் உங்களின் பணிகள் சிறப்புடன் அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் சங்கரன்கோவில் சரக துணை பதிவாளர் ரா.திவ்யா, மேலகரம் பேரூராட்சி தலைவர் வேணி வீரபாண்டியன், மேலகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவானந்தம், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சிங்கத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை பதிவாளர் கார்த்திக் கௌதம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.