May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

பசும்பொன் தேவர் நினைவிடம் அருகே 1.42 கோடி ரூபாயில் மண்டபம்- முதலமைச்சர் அறிவிப்பு

1 min read

1.42 Crore Mandapam near Pasumbon Muthuramalinga Devar Memorial – Announcement by Chief Minister M.K.Stal

28.10.2023
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தின் முகப்பில் 2 மண்டபங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக மரியாதை செலுத்தும் வகையில் ரூ.1,42,80,000 மதிப்பீட்டில் ஒரு மண்டபமும், மிக முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தும் பாதையில் ரூ.12,54,000 மதிப்பீட்டில் மற்றொரு மண்டபமும் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும்.

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீர முழக்கம் இட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் தேவர் திருமகனார் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில், 1908ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30ம் நாள் பிறந்தார்.

பள்ளிப்படிப்பினை மட்டுமே முடித்திருந்தாலும், அன்னிய நாட்டினால் அடிமைப்பட்டிருந்த அடித்தள மக்களின் அன்றாட வாழ்க்கையே போரட்டமாக இருந்ததைக் கண்ணுற்ற தேவர் பெருமகனார், அம்மக்களின் வாழ்வு மேம்பட தன்னையே அர்ப்பணித்தார்.

ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராட, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையினைத் திரட்டி அனுப்பிய பெருமை தேவர் பெருமகனார் அவர்களையேச் சாரும்
1920ம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த மிகவும் கொடுமையான குற்றப்பரம்பரை என்கிற சட்டத்திற்கு எதிராக முதன் முதலில் போராடி அச்சட்டத்தினை அகற்றியவர் தேவர் பெருமகனார் ஆவார்.

1939ம் ஆண்டு ஜூன் 22, அகில இந்திய பார்வர்டு கட்சியை நிறுவி நேதாஜி சுபாஷ் சந்திர போஸூடன் இணைந்து செயல்படல், 1952ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அருப்புக்கோட்டை பாராளுமன்ற தொகுதியிலும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி என பல்வேறு உச்சங்களைத் தொட்டவர் தேவர் பெருமகனார்.
‘வங்கத்தில் நேதாஜி; தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ எனத் தலைவர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்டவர்.

இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்ட விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

நினைவிடத்தின் முன் ஒரு சிறிய இடத்தில், குறுகிய நேரத்தில் அதிக கூட்டம் கூடுவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் திறந்த வெளியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. வெயில் மற்றும் மழையில் இருந்து அவர்களைப் பாதுகாத்திடவும், கூட்ட நெரிசலை தடுப்பதற்கும் தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் விழாவின்போது நினைவிடத்தின் முன் தற்காலிக கொட்டகை / பந்தல் மற்றும் தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது.

தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாத்திட, ஒரு நிரந்தர மண்டபம் அமைத்து தர வலியுறுத்தி அரசுக்கு பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை அளித்து வருகின்றனர்.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்தும் வகையில் 1 கோடியே 42 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மண்டபமும், மிக முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தும் பாதையில் 12 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மற்றொரு மண்டபமும், ஆக மொத்தம் 1 கோடியே 55 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள் தமிழ்நாடு அரசால் அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.