ஹமாஸ்- இஸ்ரேல் போர் நிறுத்த தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காதது ஏன்?
1 min read
Why did India not vote on the Hamas-Israel ceasefire resolution?
28.10.2023
ஹமாஸ்- இஸ்ரேல் இடையே மனிதாபிமான போர் நிறுத்தம் ஏற்பட ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடைபெற்றது. 193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. சபையில் தீர்மானத்தை ஆதரித்து 120 வாக்குகள் பதிவாகின. 14 வாக்குகள் எதிர்த்து பதிவாகின. 45 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. 45 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா சார்பில் ஏன் வாக்களிக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பை புறக்கணித்தது குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா பட்டேல் கூறுகையில் ”இந்த விவாதங்கள் பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிராக தெளிவான தகவலை அனுப்பும் என நாங்கள் நம்புகிறோம். அதேபோன்று மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ளும்போது டிப்ளோமேட்டிக் மற்றும் உரையாடலுக்கான வாய்ப்புகளை விரிவாக்கும் என நம்புகிறோம்” என்றார். மேலும் இந்தியா சார்பில் “இந்த தீர்மானத்தில் ஹமாஸ் பெயர் குறிப்பிடவில்லை. தீர்மானத்தில் மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காசா முனையில் தடையற்ற மனிதாபிமான அணுகல் தேவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹமாஸ் கண்டத்தினத்திற்கு தகுதியானவை. அக்டோபர் 7-ந்தேதி தாக்குதல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எங்களுடைய கவலையெல்லாம், அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களை பற்றியதுதான். பயங்கரவாதம் கொடியது. அதற்கு எல்லை, தேசியம், இனம் தெரியாது. நியாயப்படுத்தும் தீவிரவாத செயல்களுக்கு உலகம் விலைபோகக் கூடாது. வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம், சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிப்போம்” எனத் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 7-ந்தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1400 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தி வருகிறது.