கைது செய்யப்பட்ட 37 மீனவர்களையும் விடுவிக்க மத்திய மந்திரிக்கு முதலமைச்சர் கடிதம்
1 min readChief Minister’s letter to Union Minister to release 37 arrested fishermen
29.10.2023
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 37 மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நவடடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள், மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 28-10-2023 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனவர், இம்மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால் இவ்வாறான தொடர்ச்சியான கைதுகள் மீனவ சமூகத்தினரிடையே மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.
இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய செயல்கள் தமிழ்நாட்டின் மீனவ சமுதாயத்தினரிடையே மன அழுத்தத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது கோரிக்கைள் ஏற்கப்படாமல் போவதாக உணர்கிறார்கள். நம் மீனவர்களின் உரிமைகளுக்காக ஒன்றிய அரசு மேலும் வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் தாம் விரும்புகிறோம்.
பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
2023 அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 10 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட வேண்டும். தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தடையின்றி தொடர்கிறது.
எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில், இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக உரிய நிலையான தூதரக வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.