கஞ்சா போதையில் மாணவர்கள்- டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேதனை
1 min readStudents under the influence of ganja- Dr. Anbumani Ramdas Angam
29.10.2023
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் சோளிங்கரில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டத்தில் பங்கேற்று பேசினார் இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் சரவணன்,இளவழகன்,நிர்வாகிகள் என்.டி.சண்முகம்,சக்கரவர்த்தி,முரளி.அம.கிருஸ்ணன்,செல்வகுமார் வெங்கடேசன்,உள்ளிட்ட திரளான நிர்வாகிகளும் வாக்குசாவடி முகவர்களும் திரளான பாமகவினரும் பங்கேற்றனர் முன்னதாக . செய்தியாளர்களுக்கு அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
மகளிர் உரிமைத் தொகைக்கு கள ஆய்வுகள் நடத்தும் தமிழக அரசு , ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கும் ஆய்வுகள் நடத்த வேண்டும். இந்த ஆய்வுகள் நடத்தினால் மட்டுமே தமிழகத்தில் எந்தெந்த சாதியினர் எவ்வளவு பேர் வசிக்கின்றனர் என்பது தெரியும். அப்போது எந்த சமுதாயத்தினர் முன்னேற்றம் அடைய வேண்டும். யார் குடிசை வீட்டில் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் தெரிய வரும். இதுவே சமூகநீதி.எனவே ஜாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் என்பது மக்கள் தொகை அடிப்படையில் 32 ஆக குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது . அதே நேரம் உத்தரபிரதேசத்தில் 79 தொகுதி என்பது 120 தொகுதியாக அதிகரிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை . குறிப்பாக ராணிப்பேட்டையிலும் மருத்துவக் கல்லூரி இல்லாமல் உள்ளது. இந்தியாவில் 10 லட்சம் டாக்டர்கள், 20 லட்சம் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அதற்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 30 ஆயிரம் கோடி குறைத்துள்ளனர். இதில் தமிழகமே பரவாயில்லை. மேற்குவங்கம் மிகவும் மோசம். இந்த திட்டம் பெண்களுக்கான திட்டம். இதில் நிதியை குறைக்க கூடாது. மத்திய அரசு இந்த திட்டத்தில் அரசியல் செய்யக்கூடாது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடக்கிறது. இப்போது இருப்பது போல் நான் எப்போதும் பார்க்கவில்லை .கஞ்சா போதையில் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதை பார்க்க முடிகிறது.ரொம்ப மோசமான சூழ்நிலை உள்ளது. கஞ்சா விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏற்கனவே மதுவால் ஒரு தலைமுறை நாசப்படுத்தப்பட்டுள்ளது. கஞ்சாவால் அடுத்த தலைமுறையும் நாசமாய் விடுமோ என்ற பயம் எங்களுக்கு உள்ளது. தமிழகத்தில் இப்போது மிகப்பெரிய பிரச்சினையாக கஞ்சா உள்ளது. மாதந்தோறும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக 10 அல்லது 15 போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் .மேலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க போதை ஒழிப்பு பிரிவு என்ற போலீஸ் பிரிவை புதிதாக தொடங்கி 20 ஆயிரம் காவலர்களை நியமனம் செய்ய வேண்டும். கஞ்சாவை ஒழிக்க முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.வன்னியர்களுக்கு 10. 5 சதவீத உள்ள இட ஒதுக்கீடு கேட்டு நான் மூன்று முறை முதல்வரை சந்தித்துள்ளேன் . சமூக நீதியை நிலைநாட்ட திமுக அரசுக்கு மனசு வரவில்லை. சமூக நீதி என்று பேசும் திமுக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தவில்லை. வன்னியர்களுக்கு 10 .5% இட ஒதுக்கீடு இன்னும் வழங்காமல் உள்ளது.அவர்களுக்கு மனம் வரவில்லையா? தட்டி கழிப்பதாகவே நான் நினைக்கிறேன்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்
– செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்…