இலவச ரேஷன் திட்டம் நீட்டிபு: ரூ.49,500 கோடி அரிசி, கோதுமையை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்குகிறது
1 min read
Extension of free ration scheme: Central government provides Rs 49,500 crore rice and wheat to Tamil Nadu
12.11.2023
ரேஷனில் கார்டுதாரர்களுக்கு இலவசமாக அரிசி, கோதுமை வழங்கும் திட்டத்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு மட்டும், 49,500 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.22 கோடி டன் அரிசியும்; 5.10 லட்சம் டன் கோதுமையும் இலவசமாக கிடைக்கும்.
தமிழக ரேஷன் கடைகளில், முன்னுரிமை அரிசி பிரிவில், கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா, 5 கிலோ; அந்த்யோதயா கார்டுதாரருக்கு அதிகபட்சம், 35 கிலோ அரிசி இலவசமாகவும் வழங்கப்படுகிறது.
முன்னுரிமையற்ற பிரிவில் கார்டுதாரருக்கு அதிகபட்சம், 20 கிலோ அரிசி இலவசமாக தரப்படுகிறது.
முன்னுரிமை, அந்த்யோதயா கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசியை, இந்திய உணவு கழகம் வாயிலாக தமிழகத்திற்கு, மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது.
அதன்படி மாதம், அந்த்யோதயா பிரிவுக்கு, 62,650 டன்; முன்னுரிமை பிரிவுக்கு, 1.42 லட்சம் டன் என, மொத்தம், 2.04 லட்சம் டன் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. கிலோ அரிசியின் விலை, 39.20 ரூபாய்.
இது தவிர, இரு பிரிவு கார்டுதாரர்களுக்கும் கோதுமையும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக மாதம், 8,500 டன் கோதுமையை இலவசமாக, தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. கிலோ கோதுமையின் விலை, 27 ரூபாய்.
இந்தாண்டு ஜனவரி முதல் செயல்பாட்டில் உள்ள, இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம், வரும் டிசம்பருடன் முடிவடைகிறது. அத்திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்துள்ளார்.
இதன் விளைவாக, வரும் ஜனவரி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்திற்கு, 1.22 கோடி டன் அரிசியும்; 5.10 லட்சம் டன் கோதுமையும் இலவசமாக கிடைக்க உள்ளது. அவற்றின் மதிப்பு, 49,500 கோடி ரூபாய்.
இதுகுறித்து, மத்திய உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னுரிமை, அந்த்யோதயா கார்டுதாரர்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை, 2023 ஜனவரியில் துவக்கியது.
இத்திட்டம், அடுத்த மாதமான டிசம்பருடன் முடிவடைய இருந்தது. இந்த சூழலில், அத்திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு ஏற்ப, இந்திய உணவு கழகம் வாயிலாக, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஜன., முதல் இலவசமாக அரிசி, கோதுமை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.