கடையநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 3 வாலிபர்கள் கைது
1 min read
3 youths arrested for adventure on motorcycle near Kadayanallur
14.11.2023
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதிகளில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுபவதாக போலீசாருக்கு புகார் சென்றது.
அதன்பேரில் அச்சன்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வடகரை, பண்பொழி, திருமலை கோவில் சாலை, இலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வந்தனர். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் சில வாலிபர்கள் ரேஸில் ஈடுபட்டு அதனை வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று வடகரை கீழத்தெருவை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் முகம்மது ஆசிக் (வயது21), வடகரை ரஹ்மானியாபுரம் மேலத்தெருவை சேர்ந்த ஷேக் ஒலி(25) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் புளியரை-கொல்லம் மெயின் ரோட்டை சேர்ந்த கவுதம் கிருஷ்ணா (24) என்பவரும் சாகசம் செய்ததாக அவர் மீது இலத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
செங்கோட்டை அருகே கலங்காத கண்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் பரத்குமார்(26) என்பவருக்கு மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அவரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.