கோழிகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் தானாக வந்து சிக்கிய சிறுத்தைப்புலி
1 min read
A leopard got trapped in a cage where chickens were kept
14.11.2023
கேரள மாநிலம் வயநாட்டில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் வன விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. தெற்கு வயநாடு வனப்பகுதிக்கு உட்பட் கிராமங்களில் கால்நடைகளை வன விலங்குள் தாக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றது.
இதனால் அங்குள்ள பல கிராமங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வயநாடு கல்பெட்டா பகுதியில் கோழிகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் சிறுத்தைப்புலி ஒன்று தானாகவே வந்து சிக்கிக்கொண்டது.
தெற்கு வயநாடு வனப்பிரிவுக்கு உட்பட்ட கல்பெட்டா வடுவாஞ்சல் அருகே உள்ள கடசேரியை சேர்ந்த விவசாயி ஹம்சா. இவர் தனது வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். அவற்றை அடைப்பதற்கு பெரிய கூண்டு வைத்திருக்கிறார். அனைத்து கோழிகளையும் இரவில் அந்த கூண்டுக்குள் தான் அடைத்து வைப்பார்.
சம்பவத்தன்றும் அதே போன்று கோழிகள் அனைத்தையும் கூண்டுக்குள் அடைத்தார். இந்நிலையில் இரவு நேரத்தில் திடீரென கோழிகள் அனைத்தும் இறக்கைகளை படபடவென அடித்து பயத்தில் சத்தம் கேட்டது. இதனால் ஹம்சா மற்றும் அவரது பக்கத்து வீட்டினர் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது கோழி கூண்டுக்கள் சிறுத்தைப்புலி ஒன்று படுத்துக்கிடந்தது. அதனைப்பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த சிறுத்தையால் எழுந்திருக்கவும் முடியவில்லை. சத்தமிடவும் முடியவில்லை. மிகவும் சோர்வுடன் காணப் பட்டது.
கோழிகளை வேட்டையாடுவதற்காக கூண்டுக்குள் புகுந்த அந்த சிறுத்தையால் கூண்டை விட்டு வெளியே வரக்கூட முடியவில்லை. கோழி கூண்டுக்குள் சிறுத்தை சிக்கியிருப்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று கூண்டுக்குள் இருந்த சிறுத்தையை பிடித்தனர்.
பின்பு மற்றொரு கூண்டின் மூலம் அதனை அங்கிருந்து கொண்டு சென்றனர். ஊருக்குள் சிறுத்தை வந்தது குறித்து தெற்கு வயநாடு வன அதிகாரி ஷஜ்னா கூறியதாவது:-
உணவைத்தேடி சிறுத்தை ஊருக்குள் வந்திருக்கலாம். ஆனால் அந்த சிறுத்தை கோழிகளை வேட்டையாடவில்லை. அந்த சிறுத்தை உணவு கிடைக்காமல் வெகுநாட்களாக இருந்திருக்கலாம். இதனால் உணவு தேடி ஊருக்குள் வந்த சிறுத்தை, கோழிகளை வேட்டையாடி சாப்பிட கூண்டுக்குள் சென்றிருக்கிறது.
ஆனால் அதன்பிறகு அந்த சிறுத்தையால் எதுவும் செய்ய முடியவில்லை. பல நாட்கள் பட்டினியால் இருந்ததால் அதன் உடல் வலுவிழந்ததால், வேட்டையாட முடியவில்லை. மேலும் கூண்டுக்குள் இருந்து தப்பிச் செல்லக்கூட அதனால் முடியவில்லை. இதனால் கூண்டுக்குள்ளேயே அது சுருண்டு படுத்துக் கொண்டது. அந்த சிறுத்தைக்கு உடலில் பல இடங்களில் காயம் இருக்கிறது. அதற்கு சிகிச்சை முடிந்ததும் வனத்திற்குள் விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுவாக சிறுத்தைகள் கோழிகளை வேட்டையாடி சாப்பிடுவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சிறுத்தை பல நாட்களாக பட்டினியாக கிடந்ததால் வேறு வழியின்றி கோழிகளை வேட்டையாட முயன்று கூண்டுக்குள் சிக்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது