கனமழை முன்னெச்சரிக்கை- அமைச்சர்கள் ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவு
1 min read
Heavy rain warning- Chief Minister orders ministers to review
14.11.2023
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
நாளையும் கனமழை நீடிக்கும் என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரில் ஆய்வு செய்ய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,13 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக முன்னெச்சரிக்கை, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கு விடுமுறை
தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கனமழை எதிரொலியால் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.