காசிமேடு கடற்கரை ரூ.8 கோடியில் புதுப்பிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
1 min read
Kasimedu beach renovation at Rs 8 crore: Chief Minister M K Stalin lays the foundation stone
15.11.2023
சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருதி பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெருநகரத் திட்டமிடல் தொடர்பான கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல், நிலவகைப்பாடுகளில் உபயோக மாற்றங்களை முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் செயல்படுத்தி வருகிறது.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், வெண்பாக்கத்தில் ரூ.97 கோடியில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிலையம், அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் ரூ.13.85 கோடியில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணி, கொண்டித்தோப்பில் ரூ. 11.50 கோடியில் கட்டப்படவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையம், கோயம்பேடு சாலை சந்திப்பில் ரூ.10.30 கோடியில் அமைக்கப்படவுள்ள இயற்கை வனப்புடன் புதிய பூங்கா, மயிலாப்பூர், முண்டகக் கண்ணியம்மன் கோயில் அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ரூ.8.75 கோடியில் கட்டப்படவுள்ள புதிய உள்விளையாட்டு அரங்கம் மற்றும் காசிமேடு கடற்கரை பகுதியில் ரூ.8.65 கோடியில் கடற்கரை பகுதியை மேம்படுத்தும் பணி என மொத்தம் ரூ. 150 கோடியே 5 லட்சத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் சமய மூர்த்தி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டையில் ரூ.67.83 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் ரூ.8.89 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 27 புதிய பொது சுகாதாரத்துறை கட்டிடங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.