வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்- இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
1 min read
A storm is forming in the Bay of Bengal tomorrow. India Meteorological Department warning
16.11.2023
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதற்கிடையில், வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது. தற்போது இது விசாகப்பட்டினத்தில் இருந்து 380 கி.மீ. தொலைவில் கிழக்கு- தென்கிழக்கு பகுதியில் நிலைகொண்டுள்ளது.
இது மேலும் வலுவடைந்து வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து வருகிற 18 ந்தேதி வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்றும், மோங்கா, கொபுரா கடற்கரை இடையே கரையை கடக்கும்போது மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.
இந்த நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக மாற வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. அவ்வாறு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக மாறினால், அதற்கு மாலத்தீவுகள் பரிந்துரைத்த ‘மிதிலி’ என்று பெயரிடப்படும். இந்த புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் கடந்த மே மாதம் மேக்கா புயலும், அக்டோபர் மாதம் ஹாமூன் புயலும் உருவான நிலையில், நடப்பாண்டில் உருவாகும் மூன்றாவது புயலாக இது இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை, அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.