July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

10 மசோதாக்களை தமிழ்நாடு அரசுக்கு ஆளுனர் திருப்பி அனுப்பினார்

1 min read

புதிய கவர்னர் ஆர்.என்.ரவி

The governor sent back 10 bills to the Tamil Nadu government

16.11.2023
பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது உள்ளிட்ட நீண்டகாலமாக நிலுவையில் இருந்துவரும் 10 சட்ட மசோதாக்களுக்கு அரசிடம் விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், “தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மற்றும் அரசாணைகள், அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டிருக்கிறார்.

ஆளுநரின் இந்த செயல் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கும், தமிழக அரசாணைகளுக்கும் ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும். ஆளுநர் தரப்பில் ஒப்புதல் வழங்க கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது..

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் அரசாணைகள், கோப்புகள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருப்பது கவலைக்குரியது” என்று கருத்து தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசுக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். இந்த மசோதாக்கள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு ஆளுநர் கூறியிருக்கிறார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றி 2023 ஜனவரி – ஏப்ரல் காலகட்டத்தில் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள்.ஊழல் விவகாரங்களில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 மே மாதம் வரை ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 4 கோப்புகள். கடந்த 2022 ஆகஸ்ட் முதல் கடந்த 2023 ஜூன் வரை 54 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான கோப்புகள். டிஎன்பிஎஸ்சி காலியிடங்களை நிரப்புவது தொடர்பான கோப்புகள், ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு கிடப்பில் உள்ள நிலையில், 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

10 சட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசுக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். எனவே, இந்த மசோதாக்களை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்ற வேண்டும். அதற்காக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை அரசு கூட்டும். அந்தக் கூட்டத்தில், இந்த மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படும். எனவே, தமிழக அரசின் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் வரும் சனிக்கிழமை (நவ.18) நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபை கூடுகிறது

கவர்னர் திருப்பி அனுப்பி உள்ள 10 மசோதாக்களையும் தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.

இறையாண்மை உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வசம் 12-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அவர் குறிப்பிட்ட காலத்துக்குள் மசோதாக்களில் கையெழுத்து போட உத்தரவிடக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் 2 வாரங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தது.

சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியல் அமைப்பின் 200-வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை கவர்னர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டு இருந்தது.

சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியல் அமைப்பின் 200-வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை கவர்னர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டு இருந்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது கவர்னர்களின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பும் போது அதில் உடனுக்குடன் முடிவெடுக்க வேண்டியது தானே? ஏன் இந்த காலதாமதம்? கவர்னருக்கு சில அதிகாரங்கள் இருந்தாலும் மாநில அரசுக்கு ஆலோசனை வழங்குபவராக கவர்னர் இருக்க வேண்டும். அரசின் அதிகாரத்தை கவர்னர் கையில் எடுத்து கொள்ளக்கூடாது என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தது.

இந்த வழக்கு மீண்டும் வருகிற 20-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் கிடப்பில் வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.

அதில் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா உள்பட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் உள்ளன.

கவர்னரின் இந்த நடவடிக்கையால் மசோதாக்கள் விஷயத்தில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு அதிரடி முடிவு எடுத்து உள்ளது.

அதன்படி இந்த மசோதாக்களை மீண்டும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அதற்கு கவர்னர் முதலில் ஒப்புதல் அளிக்காமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி இருந்தார்.

அதன் பிறகு 2-வது முறையாக சட்டசபையில் அந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பிய போது வேறு வழியின்றி அந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

அதேபோல் இப்போது கவர்னர் திருப்பி அனுப்பி உள்ள 10 மசோதாக்களையும் தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) கூடுகிறது.

இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு திருவண்ணாமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

18-ந் தேதி காலை 10 மணிக்கு சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தில் கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.

இறையாண்மை உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.