July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றம்

1 min read

10 Bills sent back by the Governor to be passed again in the Assembly

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உடனுக்குடன் ஒப்புதல் கொடுக்காமல் தாமதம் செய்வதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

கவர்னர் ரவி வசம் நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் அனுமதி வழங்கக் கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அதில் அவர் “அனுமதி இல்லை” என்று மட்டும் ஒற்றை வரியில் குறிப்பிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒப்புதல் அளிக்காததற்கான காரணத்தை கவர்னர் விரிவாக தெரிவிக்கவில்லை.
இதையடுத்து தமிழக அரசும் பதிலடி நடவடிக்கையை மேற்கொள்ள நேற்று முன்தினம் தீர்மானித்தது. அதன்படி கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

10 மசோதாக்களை மீண்டும் சபையில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்காக 18-ம் தேதி (இன்று) தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் தொடங்கி நடந்தது.

முதலில் மறைந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பங்காரு அடிகளார், சங்கரய்யா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து முன்மொழிந்தார். அதில் கூறியிருப்பதாவது:

பதினைந்தாவது சட்டமன்றப் பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்ட 2 சட்ட முன்வடிவுகள், பதினாறாவது சட்ட மன்றப் பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்ட 8 சட்ட முன்வடிவுகள் கவர்னரின் ஒப்புதலுக்காக உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நெடுநாட்கள் நிலுவையில் வைத்திருந்து கடந்த 13.11.2023 அன்று எவ்வித காரணமும் குறிப்பிடாமல், ஏற்பிசை அளிப்பதை நிறுத்திவைப்பதாக சட்ட முன்வடிவுகளில் குறிப்பிட்டு கவர்னர் அச்சட்ட முன்வடிவுகளை திருப்பி அனுப்பியுள்ளார். காரணம் ஏதும் குறிப்பிடாமல் கவர்னர் ஏற்பிசை அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்து சட்ட முன்வடிவுகளை திருப்பி அனுப்பியுள்ளது ஏற்புடையதல்ல என இப்பேரவை கருதுகிறது.
இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 200-ன் வரம்புரையின் கீழ் மேற்காணும் சட்டமுன் வடிவுகள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஏற்பிசைவுக்காக முன்னிடப்படுமாயின், கவர்னர் அதற்கு ஏற்பிசைவு அளித்திடவேண்டும் என்பதை அவை கவனத்தில் கொள்கிறது.

ஏற்கனவே பதினைந்தாவது சட்டமன்றப் பேரவையில் 8.1.2020 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 9.1.20 20-ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2020-ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்ட முன்வடிவு.

9.1.2020 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட, 2020-ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (திருத்தச்) சட்டமுன்வடிவு ஆகியவற்றுடன் பதினாறாவது சட்டமன்றப் பேரவையில், 25.4.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தச்) சட்ட முன்வடிவு
5.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு 10.5.2022-ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமுன்வடிவு.

9.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு 10.5.2022-ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை (திருத்தச்) சட்ட முன்வடிவு.

10.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்டமுன்வடிவு.

18.10.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு 19.10.2022-ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்ட முன்வடிவு.

19.10.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்ட முன்வடிவு.

19.4.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டு 21.4.2023-ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்ட 2023-ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமுன்வடிவு மற்றும் 20.4.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 21.4.2023-ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2023-ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்ட முன்வடிவு ஆகிய சட்டமுன்வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 143-ன் கீழ் இப்பேரவை மறுஆய்வு செய்திட இம்மாமன்றம் தீர்மானிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 10 மசோதாக்களை அப்படியே மீண்டும் நிறைவேற்றி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதன்மீது அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்துப் பேசினார்கள்.

அதைத் தொடர்ந்து கவர்னர் திருப்பி அனுப்பிய 10 சட்டமசோதாக்களையும் சட்டசபையில் மறுஆய்வு செய்ய தாக்கல் செய்யுமாறு அமைச்சர்களை சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

அதன்படி அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.ரகுபதி, மு.பெ.சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் ஆகிய 6 அமைச்சர்கள் சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மசோதாக்களை தனித்தனியாக குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டார். அதன்படி 10 மசோதாக்கள் மீண்டும் இன்று நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இன்றைய சபை நிகழ்ச்சிகள் முடிவடைந்தது.

சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் இன்று மாலையே சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத் துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு இன்றே அனுப்பப்படும் என தெரிகிறது.

சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பும் பட்சத்தில் அதே மசோதா மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.