July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

டீப் பேக் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது சவாலாக உள்ளது- பிரதமர் மோடி பேச்சு

1 min read

Misuse of deep bag technology is a challenge- PM Modi speech

18.11.2023
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் டீப் பேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப், கஜோல் ஆகியோரின் போலி வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தீபாவளி விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-

கொரோனா வைரஸ் காலம் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பெரும் வேதனையாக அமைந்தது. கொரோனா காலம் ஓய்ந்து தற்போது பண்டிகை, திருவிழாக்களை உற்சாகமாகக் கொண்டாடி வருகிறோம். தீபாவளி உள்ளிட்ட இந்திய விழாக்கள் சர்வதேச அளவில் பிரபலமடைந்து வருகின்றன.
தீபாவளியை ஒட்டி உள்ளூர் பொருட்களை வாங்குமாறு அழைப்பு விடுத்தேன். இதையேற்று கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.4.5 லட்சம் கோடி அளவுக்கு உள்நாட்டு தயாரிப்புகள் விற்பனையாகி உள்ளன. இதே உத்வேகத்துடன் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டுகிறேன்.

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் டீப் பேக் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் போலி வீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். ஒருபோதும் தவறாக பயன்படுத்தக் கூடாது.
எனது சிறுவயது முதல் நான் கர்பா நடனமாடியது கிடையாது. ஆனால், நான் கர்பா நடனமாடும் போலி வீடியோவை அண்மையில் பார்த்தேன். அந்த வீடியோ உண்மையான வீடியோ போன்று இருக்கிறது. இது போன்று போலி வீடியோக்கள் ஆன்லைனில் பரவி வருவது கவலையளிக்கிறது.

செயற்கை நுண்ணறிவு, டீப் பேக் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதால் மிகப்பெரிய சவால்கள், அச்சுறுத்தல்கள் உருவாகி வருகின்றன. போலி வீடியோக்களை உண்மை என்று நம்பி ஏமாறும் ஆபத்து அதிகமாக இருக்கிறது.

இதுபோன்ற டீப் பேக் வீடியோக்கள் குறித்து பொதுமக்களிடையே ஊடகங்கள் விழிப்புணர்வை ஏற்டுத்த வேண்டும்.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னோடியான சாட் ஜி.பி.டி. நிறுவனம், டீப் பேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோக்களை அடையாளம் கண்டு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
தேசத்தந்தை காந்தியடிகள் தண்டி யாத்திரை நடத்தியபோது அப்போதைய இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வெளிநாட்டு நிருபர் ஒருவர், தண்டி யாத்திரை குறித்து விரிவான செய்தி வெளியிட்ட பிறகே காந்தியடிகளின் போராட்டம் அனைவரின் கவனத்துக்கும் சென்றது. சமூக நலன் சார்ந்த விவகாரங்களில் இந்திய ஊடகங்கள் எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

40 வயதுக்கு மேல் அனைத்து தரப்பினரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதுதொடர்பாக மக்களிடையே ஊடகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 40 வயதை தாண்டிய செய்தியாளர்களும் உடல் நலனில் அக்கறை செலுத்தி பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.