இந்திய அணி தோல்வி: அதிர்ச்சியில் சாப்ட்வேர் என்ஜினீயர் மாரடைப்பால் மரணம்
1 min readTeam India’s defeat: Shocked software engineer dies of heart attack
20.11.2023
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா கை ஓங்கி இருந்தது. 240 என்ற மிகக் குறைந்த ரன்கள் எடுத்த இந்திய அணி, ஆஸ்திரேலிய விக்கெட்டுகளையும் எடுக்க தவறிவிட்டது. இதனை அடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்திய அணி தோல்வி அடைந்ததை கண்டு மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான ஜோதி குமார் தன்னுடைய வீட்டில் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை தொலைக்காட்சியில் உன்னிப்பாக பார்த்து கொண்டிருந்தார். இறுதி போட்டியின் போக்கு மாற மாற வேதனையில் இருந்த ஜோதிகுமாருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பதறிபோன அவருடைய குடும்பத்தினர் உடனடியாக ஜோதி குமாரை திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜோதிகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேவும், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.