June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

பரந்தூர் விமானநிலையத்தி்ற்காக நிலம் எடுக்கும் பணி தொடங்கியது

1 min read

Land acquisition for Parantur airport has started

23.11.2023
பரந்துாரில் அமைய உள்ள, சென்னையின் இரண்டாவது விமான நிலையத்துக்கான நிர்வாக அனுமதியை, தமிழக அரசு வழங்கி உத்தரவிட்டுள்ளது. நில எடுப்பு பணிக்கான தாசில்தார்கள் நியமனங்களை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் துவங்கியுள்ளது.

பரந்தூர் விமான நிலையம்

சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரு தாலுகாக்களில், 5,000 ஏக்கர் பரப்பளவில், பரந்துார் சுற்றியுள்ள 20 கிராமங்களில் அமைய உள்ளது.
பரந்துார் பி, தண்டலம், பொடவூர், தொடூர், நெல்வாய், வளத்துார், மடப்புரம், சேக்காங்குளம், ஆட்டுப்புத்துார், கூத்திரம்பாக்கம், சிறுவள்ளூர், காரை, அக்கமாபுரம், எடையார்பாக்கம், ஏகனாபுரம், குணகரம்பாக்கம், மகாதேவிமங்கலம், சிங்கிலிபாடி, மதுரமங்கலம் ஆகிய கிராமங்கள் இதற்கான இடங்களை வழங்க உள்ளன.
இதில், 13 கிராமங்களில் விமான நிலைய திட்டமும், பிற கிராமங்களில் அணுகு சாலைகளும் அமைய உள்ளன.
பரந்தூர், ஏ.பரந்துாரில் விமான நிலையம் அமைவதாக, 2022, ஆகஸ்ட்டில் அறிவிப்பு வெளியானது முதல், இத்திட்டத்தை எதிர்த்து, ஓராண்டுக்கு மேலாக, ஏகனாபுரம் கிராமத்தினர் தொடர்ந்து பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெரும்பாலான கிராமத்தினரை, மாவட்ட நிர்வாகம் சமாதானம் செய்ததால், சில பகுதிகளில் மட்டுமே எதிர்ப்பு மன நிலை உள்ளது.

எதிர்ப்பு போராட்டம் ஒருபுறம் நடைபெறும் நிலையில், விமான நிலையம் அமைவதற்கான பூர்வாங்க பணிகளை, ‘டிட்கோ’ எனப்படும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது.
நிலங்களின் தன்மை, நில எடுப்பு செய்வதற்கான கோப்புகளை, நில நிர்வாக கமிஷனர் அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.

கிராமங்களில் சட்டம் – ஒழுங்கு பணிகளை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் கவனித்து வருகின்றனர். அவ்வப்போது சென்னையில் விமான நிலையத்துக்கான உயர்மட்ட குழுவும் ஆலோசனை நடத்தி வந்தது.
விமான நிலையம் அமையும் கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் பற்றி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையிலான ஐ.ஐ.டி., குழுவினர் இருமுறை பரந்துாரில் ஆய்வு செய்தனர்.
மேலும், மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகம், அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கப்பற்படை தளம் போன்ற மத்திய அரசின் அலுவலகங்களில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும், டிட்கோ பதில் அளித்துள்ளது.

பூர்வாங்க பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்த நிலையில், விமான நிலையம் அமையும் நிலங்களை எடுப்பதற்கு, தமிழக அரசு நிர்வாக அனுமதியை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நிர்வாக அனுமதி கிடைத்து உள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், நிலம் எடுப்பதற்கான திட்டத்தில் பணியாற்றுவதற்கு, முதற்கட்டமாக இரு தாசில்தார்கள், இரு துணை தாசில்தார்கள் என நான்கு பேர் நியமனம் செய்து கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:
விமான நிலையத்துக்கான நிர்வாக அனுமதியை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. ஆனால், நிர்வாக அனுமதி வழங்கிய உத்தரவை, அரசின் இணையதளம், வாட்ஸாப் போன்றவற்றில் அதிகாரிகள் பகிராமல் உள்ளனர்
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நில எடுப்புக்கான ‘எப்’ பிரிவில், இரு தாசில்தார்களும், இரு துணை தாசில்தார்களும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட இடம் என குறிப்பிட்டு, தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நில எடுப்பு செய்ய, 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 3 துணை கலெக்டர்கள் தலைமையில், 26 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், சர்வேயர் உள்ளிட்டோர் இடம் பெறுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *