May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

வெள்ளம் குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

1 min read

Tourists enjoy bathing in the Kurdalam waterfalls as the flood has receded

27.11.2023
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணையின் நீர்மட்டம் அரை அடி உயர்ந்து 107.40 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 857 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறில் 119.62 அடியும், மணிமுத்தாறில் 74.85 அடியும் நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 376 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மாவட்டம் முழுவதும் இந்த மாதத்தில் 249 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழை அளவை விட 19.59 சதவீதம் கூடுதலாகும். இந்த ஆண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரை மாவட்டம் முழுவதும் 367.33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இதனால் பிசான பருவ நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றுப்படுகையை ஒட்டி அமைந்துள்ள வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, முக்கூடல், கோபாலசமுத்திரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் குண்டாறு மற்றும் கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக குண்டாறு அணையில் 3.5 மில்லிமீட்டர் மழை பெய்தது. இன்று காலையில் சிவகிரி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் மழை குறைந்ததால் அருவிகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்து தண்ணீர் மிதமாக விழுகிறது. இதனால் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்டவற்றில் அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதியம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பருவமழை காரணமாக வானம் பார்த்த பூமியான பல்வேறு இடங்களில் குளிர்ந்துள்ளன. இதன்காரணமாக அப்பகுதிகளில் வெண்டை, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.

தற்போது புதியம்புத்தூர் அருகே குப்பனாபுரம் பகுதியில் மக்காச்சோளப்பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. இவை விவசாயிகளுக்கு அதிக பலன் தரும் வகையில் இருப்பதால் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். விரைவில் அவை அறுவடையாகும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.