May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

மயானங்களில் அடக்கம் செய்வதற்கான விதிமுறைகளை அரசு தளர்த்த முடிவு

1 min read

Government decision to relax norms for burials in graveyards

28.11.2023
சென்னையில் உள்ள மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக சமீபகாலமாக இடநெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வழக்கமான சென்னையில் உள்ள மயானங்களில் ஒரு உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு 14 ஆண்டுகள் கழித்தே அந்த உடலை தோண்டி எடுத்து அதில் மற்றொரு உடலை மறு அடக்கம் செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

மேலும் பலர் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து அதில் கல்லறையும் கட்டுகிறார்கள். இதுபோன்ற நடை முறைகளால் இறந்தவர்களின் உடல்களை மயானங்களில் புதைக்க இடப்பற்றாக்குறை உள்ளது. இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மயானங்களில் அடக்கம் செய்வதற்கான விதிமுறைகளை அரசு தளர்த்த முடிவு செய்துள்ளது. ஒரு உடலை தோண்டி எடுத்துவிட்டு மற்றொரு உடலை மறு அடக்கம் செய்வதற்கான நடைமுறையை 14 ஆண்டுகளில் இருந்து ஒரு ஆண்டாக குறைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நடைமுறையை அமல்படுத்திய பிறகு இன்னும் ஒரு வருடம் கழித்து பெரிதாக கட்டப்பட்டு இருக்கும் கல்லறையை சுற்றி கட்டியுள்ள இடங்களை சிறியதாக மாற்றவும் அவர்களின் உறவினர்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மயானங்களில் அதிக இடவசதி கிடைக்கும், இறந்தவர்களின் உடல்களை எந்தவித சிரமமும் இல்லாமல் அடக்கம் செய்யலாம் என்று கருதப்படுகிறது.

இது தொடர்பாக விவாதிக்க தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது வெளிநாடுகளில் உள்ள கல்லறைகளை போல கட்டிடக்கலையுடன் கூடிய கல்லறைகளுக்கு கவுன்சிலர்கள் இடவசதி கோரி வருகின்றனர். ஆனால் சென்னையில் 208 மயானங்கள் உள்ள நிலையில் அதில் பெரும்பாலான மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு இடநெருக்கடி இருப்பதாக அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் மயானங்களில் இடநெருக்கடியை போக்க விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளது. இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் மயானத்தில் மறு அடக்கம் செய்வது 14 ஆண்டுகளில் இருந்து ஒரு ஆண்டாக குறையும். கேரளா, மும்பை ஆகிய மாநிலங்களில் மயானங்களில் ஒரு வருடத்திலேயே மறு அடக்கம் செய்யப்படுகிறது. அந்த நடைமுறை சென்னையிலும் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.