May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததால் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

1 min read

Israel attacks Gaza again as cease-fire expires

1.12.2023
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் பலியானார்கள். அதுமட்டுமல்லாமல் 240 பேரை பிணைக்கைதிகளைாக பிடித்துச் சென்றனர்.
இதனால் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. சுமார் 46 நாட்கள் இடைவிடாத தாக்குதலில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
இதனால் உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் போர் நிறத்தம் ஏற்பட முயற்சி மேற்கொண்டன. இதன் பயனாக கடந்த 24-ந்தேதி வெள்ளிக்கிழமை இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது.
ஒரு பிணைக்கைதியை விடுவிக்க 3 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் ஏற்பட்டது.

முதல் நான்கு நாள் போர் நிறுத்தத்தின்போது 50 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பின் இரண்டு நாட்கள் இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. 7-வது நாள் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே சென்றது. ஹமாஸ் அமைப்பினர் அனைத்து பாலஸ்தீனர்களையும் ஜெயிலில் இருந்து விடுதலை செய்ய வேண்டும். நாங்கள் பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் ராணுவத்தினர் அனைவரையும் விடுதலை செய்கிறோம் எனத் தெரிவித்தது. ஆனால், இஸ்ரேல் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் செயல்பட முடியும் எனத் தெரிவித்தது. இதனால் இழுபறியான நிலையில் கடைசி நிமிடத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இதனால் 7-வது நாளான நேற்று ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவித்தனர். இஸ்ரேல் ஜெயிலில் இருந்து பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியுடன் ஏழு நாள் போர் இடைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்திருந்தது.

இதற்கிடையே பிணைக்கைதிகள்- பாலஸ்தீனர்கள் விடுதலை பரிமாற்றத்திற்காக இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதை விரும்புவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளும் இதைத்தான் விரும்புகின்றன. இஸ்ரேல் சென்றிருந்த அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டணி பிளிங்கடன், “இந்த நடைமுறை இன்னும் நீட்டிக்க வேண்டும் என்பதை பார்க்கிறோம். 8-வது நாள், அதையும் தாண்டி இருக்க வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்.

இஸ்ரேல் தெற்கு காசாவில் தாக்குதலை விரிவுப்படுத்தினால் மக்கள் அதிகமான அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பாதுகாப்பான இடத்தை உருவாக்கி, அந்த இடத்தில் குண்டு மழை பொழியாது என்பதை இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்த அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுதத்தை நீட்டிக்க முயற்சி மேற்கொண்டு வந்தன.

ஹமாஸ் தாக்குதல்

இந்த நிலையில் ஹமாஸ் இடைக்கால போர் நிறுத்த செயல்பாட்டை மீறிவிட்டது. கூடுதலாக இஸ்ரேல் பகுதி மீது தாக்குல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளதாக எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதனால் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.