July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

மிசோரத்தில் நாளை மறுநாள்… மற்ற 4 மாநிலங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை

1 min read
Day after tomorrow in Mizoram... Voting in other 4 states tomorrow
2.12.2023-
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. மிசோரமில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் முதல்கட்டாக 20 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.
இதன் தொடர்ச்சியாக சத்தீஸ்கரில் 2-வது கட்டமாக 70 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கும் நவம்பர் 17-ந்தேதி தேர்தல் நடந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இதில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் மீதமுள்ள 199 தொகுதிகளில் கடந்த 25-ந்தேதியும், தெலுங்கானாவில் 119 தொகுதிகளில் 30-ந்தேதியும் ஓட்டுப்பதிவு நடந்தது.

மத்திய பிரதேசத்தில் 76.22 சதவீதமும், ராஜஸ்தானில் 73.92 சதவீதமும், தெலுங்கானாவில் 71.34 சதவீதமும், மிசோரமில் 77.04 சதவீதமும், சத்தீஸ்கரில் 76.31 சதவீதமும் ஓட்டுக்கள் பதிவானது.

வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எந்திரங்கள் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. ஓட்டு எந்திரங்களுக்கு 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புடன் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. பின்னர் ஓட்டு எந்திரத்தில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி தொடங்குகிறது.

இதன் முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிசோரம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.  ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களின் புனிதநாள் என்பதால் அவர்கள் தேவாலயங்களுக்கு செல்வார்கள். இதனால் ஓட்டு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினார்கள். மேலும்  இந்த கோரிக்கைக்காக போராட்டமும் நடந்தது. இதையடுத்து கடைசி நேரத்தில் மிசோரம் மாநிலத்தில் மட்டும் ஓட்டு எண்ணிக்கையை 4-ந் தேதிக்கு (நாளை மறுநாள் ) தள்ளி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மற்ற 4 மாநிலங்களிலும் ஏற்கனவே அறிவித்தபடி நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதில் பாரதிய ஜனதா-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதாவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரசும் ஆளும் கட்சியாக உள்ளது.

தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்ட்ரீய சமிதி ஆட்சியில் உள்ளது.

தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பாரதிய ஜனதா ஆட்சியை கைப்பற்றும் என்றும், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலமான தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் மிசோரமில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலின் போதும் தேர்தலுக்கு பின் வெளியான கருத்துக்கணிப்புகள் சரியாக இருந்தது. அதே போல இந்த கருத்துக்கணிப்பின் படி தேர்தல் முடிவுகள் அமையலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
இன்றைய ஓட்டு எண்ணிக்கையின் போது 4 மாநிலங்களிலும் யார் ஆட்சியை பிடிக்க போகிறார்கள்? என்பது தெரிந்து விடும். வெற்றியை கொண்டாட பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.