திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி பறிப்பு
1 min read
Trinamool Congress MP Mahua Moitra was stripped of his post
8.12.2023
கேள்விக்குப் பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில், மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி இன்று பறிக்கப்பட்டது.
எம்.பி.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராகக் கேள்வியெழுப்ப பிரபல தொழிலதிபர் ஹிராநந்தனியிடம் பணம், பரிசுப்பொருள்கள் வாங்கியதாகவும், தன்னுடைய நாடாளுமன்ற இணையதள ஐ.டி மற்றும் பாஸ்வேர்டைப் பகிர்ந்ததாகவும், பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார். அதோடு, இதில் விசாரணை நடத்த வேண்டும் என்று மக்களவை சபாநாயகருக்குக் கடிதமும் அனுப்பியிருந்தார்.
மகுவாவின் நாடாளுமன்ற லாகின் தரவுகள் துபாயில் இருந்த படி 47 முறை பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அங்கிருந்து தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானி பயன்படுத்தி கேள்விகளை பதிவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
மகுவா மொய்த்ரா மீதான புகார் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற நெறிமுறைக்குழுவுக்கு ஓம் பிர்லா பரிந்துரைத்தார். அதன்படி மொய்த்ராவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்தக் குழு மகுவா மொய்த்ராவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்து 500 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயாரித்து அந்த அறிக்கையை குழுவின் தலைவர் வினோத் குமார் சோன்கர் நாடாளுமன்றத்தில் இன்று (டிச.08) தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் இந்த முடிவை, மஹுவா மொய்த்ரா உட்பட சில எம்.பி-க்கள் மட்டும் எதிர்த்தனர்.
இருப்பினும், தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் பதவிநீக்கப் பரிந்துரை அறிக்கை அமர்வுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகின. அதன்படியே, இன்று நடைபெற்ற கூட்டத்தில் அந்த அறிக்கை அமர்வுக்கும் வந்தது. இதில் மஹுவா மொய்த்ரா பதவிநீக்கமும் செய்யப்பட்டார். மஹுவா மொய்த்ரா மீதான இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகளின் எம்.பி-க்கள், அவையிலிருந்து வெளிநடப்பு செய்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.