April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் வெளுத்துக்கட்டும் மழை: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

1 min read

Nellai, Tenkasi, Kanyakumari, Tuticorin due to whiteout rain: School holiday tomorrow

17.12.2023
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் மழை தொடர்ந்து வெளுத்துக்கட்டுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

கனமழை

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது.

அதன்படி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வெளுத்து வாங்கும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் அணைகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஆற்றில் வெள்ளம்

தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான குடிநீர், ஓரிரு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் பவர் பேங்க், கொசுவர்த்தி உள்ளிட்டவை கையிருப்பு இருக்க வேண்டும். ஒரு சில இடங்களில் மின் சப்ளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் குடிநீர் சப்ளை மற்றும் போர் மோட்டார் இயக்கத்தில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே எங்கெங்கு வாய்ப்புள்ளதோ அந்த ஊர்களில் எல்லாம் குடிநீர் டேங்க், சின்டெக்ஸ் டேங்க் உள்ளிட்டவற்றை இன்றே நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 25 பேர் கொண்ட 4 தேசிய பேரிடர் மீட்புப்படை குழு வருகை தர உள்ளது.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் தொடரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முன்னெச்சரிக்கையாக குத்தாரபஞ்சன் அருவி, கன்னியாமாரன், ஓடைக்கு செல்ல வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் மாலையில் 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.

கனமழை காரணமாக தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானங்கள் மதுரையில் தரையிறங்கின.

பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு அதிகாரி

4 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
4 மாவட்ட மீட்புப் பணிகளுக்காக கண்காணிப்பு அதிகாரிகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி-நாகராஜன், நெல்லை-செல்வராஜ், தூத்துக்குடி-ஜோதி நிர்மலா, தென்காசி-சுன்சோங்கம் ஜதக் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் விரைந்துள்ளன என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தனியார் நிறுவனங்கள் அத்தியாவசிய பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதி. பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அவசர உதவிக்கு 1070, 1077, 94458 69848 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.