June 16, 2024

Seithi Saral

Tamil News Channel

ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காததால் காங்கிரஸ் அதிர்ச்சி

1 min read

Congress shocked by not announcing Rahul as PM candidate

20/12/2023
பாராளுமன்ற தேர்தலில் பாஜனதா கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன.

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் 4-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்ட 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.


இந்த கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே பெயரை அறிவிக்கலாம் என்று விருப்பம் தெரிவித்தார். இதற்கு அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆதரவு தெரிவித்தார். மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட 12 தலைவர்கள் உடனடியாக இதற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.

ஆனால் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் வேட்பாளர் ஆவதற்கு மறுப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘நான் அடித்தட்டு மக்களுக்காக பணியாற்றவே விரும்புகிறேன். இந்தியா கூட்டணி முதலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும். பெரும்பான்மை எம்.பி.க்களை பெறுவதற்கு முன்பு பிரதமர் வேட்பாளர் குறித்து ஆலோசிப்பதில் பயன் இல்லை. வெற்றி பெற்ற பிறகு பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யலாம்’ என்றார்.
இந்தியா கூட்டணியில் உள்ள பெரிய கட்சி காங்கிரஸ் என்பதால் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த கட்சி காய் நகர்த்தி வருகிறது. இந்த நேரத்தில் மம்தா உள்ளிட்ட தலைவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டால் அது சோனியா மற்றும் ராகுலுக்கு தர்மசங்கடமாக போய்விடும் என்பதற்காக கார்கே இதை உடனடியாக மறுத்தார்.

அதே நேரத்தில் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க இந்தியா கூட்டணியில் உள்ள பல தலைவர்கள் விரும்பவில்லை என்பதை நேற்றைய கூட்டம் வெளிப்படுத்தியது. பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி பெயரை அறிவிக்காததற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அடுத்தடுத்த நிபந்தனைகளையும் விதித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியில் உள்ளது.

ராகுல்காந்தி இருக்கும்போது, மல்லிகார்ஜூன கார்கே தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை விரும்ப மாட்டார் என்பது மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு தெரியும்.

ஆனாலும் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்து ராகுல்காந்தியை வெளியேற்றவே அவர்கள் இருவரும் இந்த வியூகத்தை வகுத்ததாக பா.ஜனதா மூத்த தலைவர் கிரிராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.