தென்காசியில் பத்திரப்பதிவு செய்துவிட்டு ரூ.21 லட்சம் மோசடி
1 min read
21 lakh fraud after registering a deed in Tenkasi
21.12.2023
தென்காசியில் 25 லட்சம் மதிப்புள்ள இடத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து விட்டு வெறும் 50 ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்து மோசடி செய்து விட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி செக்கடி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் ராஜ்குமார் இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் செந்தில் குமார் என்பவரிடம் ரூபாய் 4.50 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
இந்த கடனுக்காக குற்றாலம் அருகே உள்ள மேலகரத்தில் தனக்கு சொந்தமான இடத்தை ரூபாய் 25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு செந்தில் குமாருக்கு விலை பேசி ஒப்பந்தம் செய்துள்ளனர.
ராஜ்குமார் அந்த இடத்தை செந்தில்குமார் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்றும் அதன்பின் ராஜ்குமார் செந்தில்குமாருக்கு கொடுக்க வேண்டிய 4.50 லட்சம் ரூபாய் போக மீதியுள்ள 21 லட்சம் ரூபாயை செந்தில்குமார் ராஜ்குமாருக்கு கொடுக்க வேண்டும் என்று இருவரும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அதன்படி நேற்று தென்காசி இணை சார்பதிவாளர் – 02 அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடந்துள்ளது. அப்போது ராஜ்குமார் தான் பேசியபடி அந்த இடத்தை செந்தில்குமாரின் பெயருக்கு மாற்றம் செய்து பத்திரப்பதிவில் கையெழுத்து போட்டுள்ளார். பத்திரப்பதிவு முடிந்ததும் செந்தில்குமார் ஒரு சாக்கு பையை கட்டிய நிலையில் அதில் 21 லட்சம் ரூபாய் இருப்பதாக கூறி ராஜ்குமாரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அதனைத் தொடர்ந்து ராஜ்குமார் அந்த சாக்கு பையை அவிழ்த்து பார்த்த போது அதில் பத்து ரூபாய் கட்டுகளில் மேலும் கீழும் 500 ரூபாய் நோட்டுக்களை வைத்து கட்டி இருப்பது தெரியவந்தது. அதனை எண்ணிப் பார்த்தபோது மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.
21 லட்சம் ரூபாய் தரவேண்டிய செந்தில்குமார் வெறும் 50 ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் உடனடியாக செந்தில் குமாரை செல்போனில் தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் உடனடியாக இது பற்றி தென்காசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதங வழக்கு பதிவு செய்த போலீசார் பண மோசடி செய்து விட்டு தப்பி ஓடிய செந்தில்குமாரை வலை வீசி தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.