வளர்ச்சிக்கு உதவும் கிறிஸ்தவர்கள்: பிரதமர் மோடி பாராட்டு
1 min read
Christians Helping Development: Praises PM Modi
25.12.2023
‘ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்வதில் கிறிஸ்தவ சமூகம் முன்னணியில் உள்ளது’ எனவும், ‘பல பள்ளிகளை நடத்தி குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்து, கல்வி வளர்ச்சிக்கு உதவுகின்றனர்’ எனவும், கிறிஸ்தவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாதிரியார்கள் உள்ளிட்ட கிறிஸ்தவ மத முக்கிய பிரமுகர்களை பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சந்தித்தார். அவர்கள் மத்தியில் மோடி பேசியதாவது:-
கிறிஸ்துமஸ் திருநாளில் உலக மக்களுக்கும், கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த புனிதமான நாளில் நீங்கள் அனைவரும் எனது இல்லத்திற்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை ஏழைகளின் நலனுக்கானது. ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்வதில் கிறிஸ்தவ சமூகம் முன்னணியில் உள்ளது.
கிறிஸ்தவர்கள் சமூக நீதி பக்கம் நிற்பவர்கள். பல பள்ளிகளை நடத்தி குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்து, கல்வி வளர்ச்சிக்கு உதவுகின்றனர். நாட்டிற்கு உங்கள் பங்களிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போப்பை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மிகவும் மறக்கமுடியாத தருணம். உலகத்தை சிறந்த இடமாக மாற்ற, சமூக நல்லிணக்கம், உலகளாவிய சகோதரத்துவம், பருவநிலை மாற்றம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்றவற்றை பற்றி நாங்கள் விவாதித்தோம்.
இவ்வாறு அவர் பேசினார்.