May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்

1 min read

Actor Vijay provided relief to the flood victims

30.12.2023
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது.

கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் அணைகள் நிரம்பியதால் சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன.

லட்சக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் தவித்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தமிழக அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ.1000 என வழங்கப்பட்டது.
இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள கே.டி.சி.நகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி வெள்ளப்பெருக்கின்போது பாத்திமா நகரை சேர்ந்த ராபின்சிங் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு ஏற்கனவே விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராபின்சிங் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதியை விஜய் வழங்கினார்.

இதேபோல் வீடுகளை இழந்த வள்ளி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், இசக்கி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், சங்கரன் என்பவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வீடுகள் சேதம் அடைந்த 30 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை வழங்கினார்.

மேலும் 5 கிலோ அரிசி, சர்க்கரை, ரவை, கோதுமை, சேமியா, உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் வேட்டி, சட்டை, துண்டு ஆகியவற்றை 1,500 பேருக்கு விஜய் வழங்கினார். தொடர்ந்து 2,500 பேருக்கு வடை, பாயாசத்துடன் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.