May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

சபரிமலையில் சாமி தரிசனத்துக்கான உடனடி முன்பதிவு 15-ந்தேதி வரை நிறுத்தம்

1 min read

Instant Booking for Sami Darshan at Sabarimala Stops till 15th

10.4.2024
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

மண்டல பூஜை சீசனைப் போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. இதனால் பம்பை, மரக்கூட்டம், நடைப்பந்தல், பதினெட்டாம்படி, சன்னிதான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.

ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு வசதிகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்தார்கள். தினமும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிகிறது.
இதன் காரணமாக வயதானவர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் திணறி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பதினெட்டாம்படி பகுதியிலேயே தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களை போலீசார் தாக்கினர். அவர்கள் சன்னிதான ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவம் சபரிமலைக்கு வந்த பக்தர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மகரவிளக்கு பூஜை தினத்தில் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தேவசம்போர்டு முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் 15-ந்தேதி வரை உடனடி முன்பதிவை நிறுத்துவது, 14 மற்றும் 15-ந்தேதி ஆகிய 2 நாட்களும் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை குறைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

அந்த முடிவின்படி உடனடி முன்பதிவு நிறுத்தம் இன்று அமலுக்கு வந்தது. இதனால் நிலக்கல்லில் செயல்பட்டு வந்த உடனடி முன்பதிவு மையம் மூடப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களை தவிர மற்றவர்கள் வராமல் இருப்பதை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதன் காரணமாக பம்பையில் பக்தர்கள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் பக்தர்கள் வருகை இன்றும் அதிகமாக காணப்பட்டது. இதனால் சன்னிதான பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பதினெட்டாம்படி மற்றும் சன்னிதான பகுதியில் நெரிசல் காணப்பட்டது.

உடனடி முன்பதிவு நிறுத்தம் வருகிற 15-ந்தேதி வரை அமலில் இருக்கும். மகரவிளக்கு பூஜை முடிந்ததும் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை உடனடி முன்பதிவு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.