May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

பொன்முடி, அவரது மனைவிக்கு சரணடைவதில் இருந்து உச்ச நீதிமன்றம் விலக்கு

1 min read

Supreme Court exempts Ponmudi from surrendering to his wife

12.1.2024
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயர் கல்வி துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டுஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. பின்னர், விழுப்புரம்மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரமூர்த்தி, இந்த வழக்கில் பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016 ஏப்ரல் 18-ம் தேதி தீர்ப்பு அளித்தார்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில்கடந்த 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் இந்தவழக்கை மேலோட்டமாக விசாரித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு, அதாவது 64.90 சதவீதம் அளவுக்கு அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து குவித்துள்ளதாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபணமாகியுள்ளன.

எனவே, இருவரையும் விடுதலை செய்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அபராதம் செலுத்த தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பைத் தொடர்ந்து பொன்முடி அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். இதனிடையே, சிறையில் சரணடைய விலக்கு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி ஆஜராகி, சிறையில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சிறையில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது. தண்டனை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.