தஞ்சம் புகுந்த மியான்மர் ராணுவ வீரர்களை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பிய இந்தியா
1 min read
India repatriated Myanmar soldiers who took refuge
23.1.2024
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் ராணுவத்துக்கும், ஆயுதமேந்திய கிளர்ச்சி குழுவினருக்குமிடையே தொடர்ந்து சண்டை நடக்கிறது. கிளர்ச்சிக்குழுவினரின் கை ஓங்கும் பகுதிகளில் ராணுவ வீரர்கள் பின்வாங்கி அண்டை நாடான இந்தியாவுக்குள் அடிக்கடி நுழைந்து தஞ்சம் அடைகின்றனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
கடந்த வாரம் நடந்த தாக்குதலின்போது ரக்கினே மாநிலத்தில் உள்ள ராணுவ முகாம்களை கிளர்ச்சிக்குழுவினர் கைப்பற்றியுள்ளனர். அங்கிருந்து தப்பிய ராணுவ வீரர்கள் பலர் இந்தியாவுக்குள் நுழைந்தனர். இந்தியாவுக்கு தப்பி வந்த ராணுவ வீரர்கள், எல்லையோர மாநிலமான மிசோரமின் லாங்திலாய் மாவட்டத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் அசாம் ரைபிள் படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
மொத்தம் 276 வீரர்கள் வந்த நிலையில், அவர்களில் 184 பேர் நேற்று மியான்மரின் ரக்கினே மாவட்டம் சித்வே நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஐசால் அருகே உள்ள லெங்புயி விமான நிலையத்தில் இருந்து மியான்மர் விமானப்படை விமானங்களில் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், மீதமுள்ள 92 வீரர்கள் இன்று அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் அசாம் ரைபிள் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவின் மிசோரம் மாநிலம் மியான்மருடன் 510 கி.மீ நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.