ஞானவாபி மசூதியின் ஒரு பகுதியில் வழிபாடு செய்ய இந்துக்களுக்கு கோர்ட்டு அனுமதி
1 min readCourt allows Hindus to worship in a part of Gnanawabi Masjid
31.12024
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்துக் கடவுளின் சிலை இருப்பதாகவும், அதனால் தங்களை வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் இந்து மதத்தைச் சேர்ந்த சில பெண்கள் நீதிமன்றத்தை நாடினர். அப்போது நீதிமன்றம் இது தொடர்பாக ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மசூதி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இறுதியாக ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு உடன் மசூதியில் தொல்லியல்துறை அறிவியல்பூர்வ ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வு மேற்கொண்டு தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையில் மசூதிக்குள் கடவுள் சிலை இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக குறிப்பிட்டிருந்ததாக தகவல் வெளியானது.
இது தொடர்பான வழக்கு இன்று உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் “ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதி அடிபாகத்தில் உள்ள இடத்தில் இந்து பிரிவினர் வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
மேலும், காசி விசுவநாதர் கோவில் அறக்கட்டளை வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்க வேண்டும் என்றும் பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்குள் பூஜைகள் நடத்தப்படும் என இந்து பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இந்து தரப்பு வழக்கறிஞர் சுதிர் திரிபாதி கூறுகையில் “வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த 7 நாட்களில் எந்த நாட்களிலும் வழிபாடு தொடங்கப்படலாம்” என்றார்.
இந்து தரப்பினர் சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் விஷ்ணு ஷங்கர் ஜெயின் “நாங்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்வோம்” என்றார்.
மற்றொரு வழக்கறிஞர் சுபாஷ் நந்தன் சதுர்வேதி “இன்று பூஜை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மாவட்ட அதிகாரிகள் தீர்ப்பை ஒருவாரத்திற்குள் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது” என்றார்.
முன்னதாக,
கடந்த 2021-ம் ஆண்டு சில பெண்கள் ஞானவாபி மசூதிக்குள் உள்ள இந்து தெய்வங்களை வழிபட அனைத்து நாட்களும் அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் இருந்து இந்த விவகாரம் இந்திய அளவில் பேசும்பொருளாகியுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அப்போது அங்கு சிவலிங்கம் காணப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.
ஆனால் மசூதி நிர்வாகம், அவர்கள் கூறும் பகுதி ஒரு நீரூற்று பகுதி. மசூதியில் தொழுகை நடத்த வருபவர்கள், கை கால் கழுவதற்கான தொட்டியில் நீர் நிரப்பப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. ஆனால், இந்த பிரச்சனை உணர்திறனை மனதில் வைத்து உச்சநீதிமன்றம் அந்த இடத்தை சீல்வைக்க அதே மாதம் உத்தரவிட்டது.