September 16, 2024

Seithi Saral

Tamil News Channel

பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரை-“ஒரே பாரதம், உன்னத பாரதம்”

1 min read

President’s speech in joint session of Parliament – “One Bharat, Unnatha Bharat”

31.1.2024
“ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சியை பெற்றுவருகிறது.” என்று நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 9-ம் தேதி முடிவடைய உள்ள இந்த கூட்டத்தொடரில், பிப்ரவரி 1-ம் தேதி ( நாளை ) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை, இடைக்கால பட்ஜெட் தாக்கல் மீதான விவாதம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் பதிலுடன் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஆகியவையே இந்த சுருக்கமான அமர்வின் முக்கிய நிகழ்ச்சியாக அமையும்.

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்துவது இதுவே முதல் முறை. அந்தவகையில் திரவுபதி முர்மு தனது உரையில், “புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது எனது முதல் உரையாகும். இந்த பிரம்மாண்டமான கட்டிடம் இந்தியா சுதந்திரமடைந்த 75-வது ஆண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தில் கொள்கைகள் பற்றிய அர்த்தமுள்ள உரையாடல் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இந்த நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சியைப் பெற்றுவருகிறது. இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது. 5ஜி தொழில்நுட்பம் நாட்டில் மிக விரைவாக கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 6 மாதமாக பொருளாதார வளர்ச்சி 7.5%க்கும் அதிகமாக உள்ளது.

இஸ்ரோவின் சந்திரயான், ஆதித்யா திட்டங்களில் வெற்றியால் இந்திய தேசிய கொடி உலக அரங்கில் பட்டொளி வீசி பறக்கிறது. அதேநேரம், மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஏழை மக்களையும் ஏழ்மையில் இருந்து மீள வைக்க முடியும். வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நிதி பற்றாக்குறை குறைந்துள்ளது. ஆண்டு வருவாய் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது. நாடு முழுவதும் வங்கிகளின் வராக்கடன் 4% ஆக குறைந்துள்ளது. உலக அளவில் நெருக்கடி இருந்தபோதும் பணவீக்கத்தை இந்த அரசு கட்டுக்குள் வைத்திருந்தது. உலகின் ஐந்து பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா ஒன்றாக வளர்ந்துள்ளது. செல்போன் உற்பத்தியில் உலகின் 2-வது நாடாக இந்தியா மாறியுள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியால் மக்களின் வாழ்க்கை எளிதாகியுள்ளது. 1 லட்சம் கோடி அளவுக்கு தினசரி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. யுபிஐ பரிவர்த்தனைகள் 1,200 கோடி அளவுக்கு நடைபெறுகிறது. உலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் பங்கு 46% ஆக உள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்து உலகம் முழுவதும் பெருமையாக பேசப்படுகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளில்கூட இத்தகைய நவீன டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இல்லை. தமிழ்நாட்டில் பாதுகாப்புத்துறை உற்பத்தி மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, உத்தரபிரதேசத்தில் பாதுகாப்பு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ ஆகிய திட்டங்கள் நமது நாட்டின் பலமாக உள்ளது.

அதேபோல் நாட்டின் 20 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை நடைமுறையில் உள்ளது. ரயில்வே துறையை முழுக்க முழுக்க மின்மயமாக மாற்றும் பணி விரைவில் நடைபெறவுள்ளது. இல்லங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டுசெல்லும் பணி விரைவில் முடியவுள்ளது. கிராமங்களில் கிட்டத்தட்ட 4 லட்சம் கி.மீ சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 90 ஆயிரம் கிமீ என்பதில் இருந்து 1.46 லட்சம் கிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா 4 சக்திகளை கொண்டு இயங்கி வருகிறது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழை மக்களே இந்த நாட்டின் தூண்கள். இந்த நான்கு தூண்களை வலுப்படுத்தும் பணியில் இந்த அரசு ஈடுபட்டு வருகிறது.

கரோனா பேரிடர் பாதிப்பிலிருந்து இந்தியா வெற்றிகரமாக மீண்டுவந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் 3 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்களின் பணம் சேமிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கும் விமானப் பயணம் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. ஏழை பெண்களுக்கு ரூ.7 லட்சம் கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. விவசாய கடன் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு உழைத்து வருகிறது. கிசான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு சுமார் ரூ.3 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 80 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 11 கோடி மக்களுக்கு தூய்மையான குடிநீர் குழாய் மூலம் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் கிராமங்களுக்கும் 4ஜி தொலைத்தொடர்பு சேவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கைவினை கலைஞர்களுக்கு ஊக்கமளிக்க தனித்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு சமூகத்தில் கவுரவமான இடத்தை வழங்கவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தனிச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீவிரவாதம் குறைந்துள்ளது: தீவிரவாதம் போன்ற செயல்களுக்கு நமது படைகள் பதிலளித்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்துள்ளது. நாட்டில் நக்சல் வன்முறையும் குறைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் இன்று பாதுகாப்பான சூழல் நிலவுகிறது.

உற்பத்தி துறையில் இந்தியா முக்கிய இடம் வகிக்கும் என்று உலக நாடுகள் நம்புகின்றன. சூரிய ஒளி, காற்றாலை மின் உற்பத்தி வேகமாக அதிகரித்து வருகின்றன. நாட்டில் அந்நிய முதலீடுகள் அதிகரிப்பதால் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும். மேட் இன் இந்தியா உலகளவில் பிராண்டாக மாறியுள்ளது. விண்வெளி திட்டங்களிலும் உலக அளவில் இந்தியா சக்திவாய்ந்த நாடக மாறியுள்ளது.

பழங்குடியின குடும்பங்கள் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு பெறுகின்றனர். பழங்குடியினரை அதிகம் பாதிக்கும் ரத்த சோகை நோயை தடுக்க தனித் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பழங்குடியின கிராமங்களுக்கு மின்சாரம் மற்றும் சாலை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 4ஜி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கை: ஒருநாடு வளர்ச்சியடைந்த நாடாக இருக்க பொருளாதார வளர்ச்சியை விட சமூக வளர்ச்சியே முக்கியம். புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மாநில மொழிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த அரசின் நடவடிக்கையால் வெகுவாக குறைந்துள்ளன. இந்திய இளைஞர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் நாடு முழுவதும் 84 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இளைஞர்களின் திறன், வேலைவாய்ப்புடன் இணைக்கும் வகையில் விளையாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருகிறோம். ஏழை நாடுகளின் குரலாக இந்தியா ஒலித்து வருகிறது. உலகின் நண்பனாக இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது.

அயோத்தி பால ராமர் தரிசனம்: அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு பால ராமர் சிலையை 5 நாட்களில் 13 கோடி பேர் தரிசித்துள்ளனர்” இவ்வாறு குடியரசுத் தலைவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.