தமிழக சட்டசபை நாளை கூடுகிறது
1 min read
The Tamil Nadu Assembly will meet tomorrow
11.2.2024
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை நாளை கூடும் நிலையில், காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நாளை தொடங்கி அடுத்த ஒரு வார காலம் வரை நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் சட்டசபை கூடவுள்ளதால் ஆசிரியர்கள் கைது, காவிரி விவகாரம், சுகாதாரத்துறையில் நிகழ்ந்த குளறுபடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையில் எடுக்க முடிவு செய்துள்ளது அதிமுக. மேலும், திமுக தேர்தல் வாக்குறுதிகள் பற்றியும் சட்டசபையில் அதிமுக புயலை கிளப்பத் திட்டமிட்டுள்ளது. இன்று ஆளுனர் ஆர் என் ரவி சட்டசபையில் உரையாற்றுகிறார்.
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் உள்ள குறைகள் மற்றும் குளறுபடிகள் குறித்தும் அதிமுக சட்டசபையில் பேசத் திட்டமிட்டுள்ளது. அதேபோல் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி குறித்தும் அதிமுக தரப்பில் சட்டசபையில் பேசத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் எல்லா தரவுகளையும் அமைச்சர்கள் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். இதனிடையே இந்தக் கூட்டத் தொடரில் 2023 -2024 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதேபோல் காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சி ஆதரவுடன் அரசு தீர்மானம் கொண்டு வரவும் வாய்ப்புள்ளது. கர்நாடகாவில் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் சூழலில், இந்த விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி கொண்டு வரப்படும் தீர்மானத்தை பாஜக ஆதரிக்காது எனத் தெரிகிறது. இதனால் இந்தக் கூட்டத்தொடரில் பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமிருக்காது என்பது மட்டும் தெளிவாகிறது.
இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்துக்கு எங்கு இருக்கை ஒதுக்கப்படும் என்பதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்து அதிமுக தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதோடு அக்கட்சியினர் அண்மையில் சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்தும் முறையிட்டனர். இதனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்தக் கூட்டத் தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்பது இன்று சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூடிப்பேசி முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.