அனைத்து மாவட்டங்களிலும் காமராஜர் பெயரில் நவோதயா பள்ளி தொடங்கப்படும்-அண்ணாமலை பேச்சு
1 min read
Navodaya school to be started in Kamaraj name in all districts – Annamalai talk
24.2.2024
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள் ’ நடைபயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழக அரசின் இலவச வேஷ்டி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. 2019-ல் பா.ஜனதா 295 தேர்தல் வாக்குறுதியை கொடுத்துள்ளது. அதில் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம்.
கடந்த 2021-ல் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 511 தேர்தல் வாக்குறுதியை கூறியது. அதில் 20 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறினார்கள். பெண்கள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று கூறினார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள்.
ஆனால் எதனையுமே தி.மு.க. செய்யவில்லை. ராமர் கோவில், 370 சட்ட திருத்தம், முத்தலாக் தடை சட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் போன்ற வாக்குறுதிகளை பா.ஜனதா நிறைவேற்றி உள்ளது. 73 சதவீதம் குடிநீர் பிரச்சினையை தீர்த்துள்ளோம்.
அடுத்து பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். பெண்களுக்கு 33 சதவீதம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும். நீர் ஆதாரத்தை உயர்த்துவதற்கு காமராஜர் கொண்டு வந்த திட்டமான இரட்டை குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றால் ஏழை குழந்தைகளுக்காக அனைத்து மாவட்டங்களிலும் காமராஜர் பெயரில் நவோதயா பள்ளி தொடங்கப்படும்.
2026-ல் பா.ஜனதா ஆட்சி அமைத்தால் 3 வருடங்களில் மதுக்கடையை ஒழிப்போம். மதுக்கடைகளை ஒழித்து விட்டு புதிதாக கள்ளுக்கடைகளை திறப்போம். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத்துறை நீக்கப்படும். கோவில்கள் மக்களிடம் ஒப்படைக்கப்படும். கனிம வள கொள்ளை தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.