கோவில் நிலங்கள் வாடகை நிர்ணயம்: அரசு கருத்தை தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு
1 min readFixation of rent for temple lands: Court orders Govt
29.2.2024
கோவில் நிலங்களை அரசு எடுக்கும் போது, அதற்கு உரிய குத்தகை வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசு கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி, அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள கோவில்களின் நிதியில் இருந்து, கல்லுாரிகள் துவக்குவது மற்றும் கோவில் நிதியை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்து, ‘இண்டிக் கலெக்டிவ்’ அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதிதாக கல்லூரிகள் துவங்க இடைக்கால தடை விதித்ததோடு, நான்கு கல்லுாரிகளின் செயல்பாடு, இந்த இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது எனக்கூறி, நான்கு கல்லூரிகளை தொடர்ந்து நடத்தவும் அனுமதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘கோவில் நிலங்களில், அரசு நிதியை பயன்படுத்தி, கல்லுாரிகள் கட்டப்பட்டிருந்தால், அத்தகைய நிலங்களை பயன்படுத்த, அரசு சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு வாடகை செலுத்தினால், ஏதேனும் ஆட்சேபனை இருக்கிறதா?’ என, மனுதாரர் டி.ஆர்.ரமேஷிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ‘கோவில் நிலங்களின் குத்தகை மற்றும் நியாயமான வாடகை நிர்ணயம் தொடர்பான அறநிலையத்துறை சட்டத்தில் உள்ள விதிகளுக்கு உட்பட்டு, கோவில் நிலங்களில் கல்லுாரிகளை அரசு துவங்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை’ என, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ”இவ்விவகாரத்தில் அரசின் கருத்தை அறிந்து தெரியப்படுத்தவும், பதிலளிக்கவும் கால அவகாசம் வழங்க வேண்டும்,” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘கல்வியின் நோக்கத்துக்காக, அரசு முன்னெடுக்கும் இதுபோல விஷயங்கள் வாயிலாக, கோவில் நிலங்களும் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படும்.
‘மேலும், அந்த சொத்துகளுக்கு கிடைக்கும் வாடகை வாயிலாக, கோவில்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதுடன், அவையும் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்புடன் இருக்கும். எனவே, இவ்விவகாரம் தொடர்பாக, அரசின் நிலைப்பாட்டை அறிந்து, அறநிலையத்துறை இரண்டு வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும்’என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.