செங்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை – பொதுமக்கள் பீதி
1 min read
A wild elephant entered the town near Red Fort – public panic
17-.3.2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கிராமப் பகுதிகளுக்குள் உலா வரும் ஒற்றைக் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதியில் உள்ள கிராமங்களான குற்றாலம், வல்லம், கண்ணுபுளிமெட்டு, மோட்டை, இரட்டை குளம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்து விவசாய நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், ஊருக்குள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர்.
குறிப்பாக, அந்த ஒற்றைக் காட்டு யானையானது அப்பகுதியில் மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் நிலையில், அதனை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தும் பலன் அளிக்காமல், அந்த யானை வனப் பகுதிக்குள் செல்லாமல் வனத்துறையினர் ஒரு பகுதியில் விரட்டினால் மற்றொரு கிராம பகுதிக்கு சென்று விடுவதாகவும், இதனால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக பொறுமை காத்துவரும் வனத்துறையினர் தற்போது அந்த ஒற்றைக் காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், வனப்பகுதிக்குள் தற்போது தண்ணீர் இல்லாத காரணத்தினால் தான் அந்த ஒற்றை காட்டு யானையானது விவசாய பகுதிக்குள் சுற்றி வருவதாகவும், ஆகவே பொதுமக்கள் மாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் விவசாயப் பகுதிகளுக்கும், மலை அடிவாரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக, வல்லம் பகுதி மக்களுக்கு குற்றால வனத்துறையினர் சார்பில் தற்போது ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் செய்யப்பட்டு வரும் நிலையில், அதே போல் கண்ணுபுளிமெட்டு, மோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வனத்துறையினர் வீதி வீதியாக சென்று ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி வனத்துறை அதிகாரிகள் அந்த காட்டு யானையை ஊர் பகுதியில் இருந்து வனப்பகுதிக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.