தென்காசி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்- கலெக்டர், எஸ்.பி பேட்டி
1 min read
Enforcement of Election Conduct Rules in Tenkasi Constituency- Collector, SB Interview
17.3.2024
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் மற்றும் தென்காசி காவல்துறை கண்காணிப்பாளர் டி பி சுரேஷ்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது:-
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தென்காசி நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் 20.03.2024 துவங்கும் வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் 27.03.2024. வேட்பு மனு பரிசீலனை நாள் 28.03.2024. வேட்பு மனு விலக்கி கொள்வதற்கான நாள் 30.03.2024. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு நாள் 30.03.2024. போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நாள் 30.03.2024.தேர்தல் நாள் 19.04.2024. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் 04.06.2024. ஆகும்.
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. அதன்படி
சட்டமன்ற தொகுதிகளுக்கு எட்டு மணி நேரத்திற்கு ஒரு குழு வீதம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 குழுக்கள் வீதம் 15 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் சட்டமன்ற தொகுதிகளுக்கு எட்டு மணி நேரத்திற்கு ஒரு குழு வீதம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 குழுக்கள் வீதம் 15 நிலையான கண்காணிக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் இயங்கும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளன. இன்று முதல் பறக்கும் படை குழுக்கள் பணியிலிருக்கும் 20ம் தேதி முதல் நிலையான கண்காணிக்கும் குழுக்களும் பணியமர்த்தப்படும்.
மேலும், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக பொது மக்கள் 1800-425-8375என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள எண் மூலமாகவும் புகார் அளிக்கலாம்
பொதுமக்கள் அளித்திடும் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவிற்கு அனுப்பப்பட்டு 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரம் உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையாக அனுப்பப்படும்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில்; மொத்தம் ஆண்கள்- 7,42,158, பெண்கள்-7,73,822, மூன்றாம் பாலினம்-203, மொத்தம்- 15,16,183.
தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமான மற்றும் கவனிக்கத்தக்க வாக்க சாவடிகள் 120 உள்ளன.
தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளதால்
அரசு வளாகம், கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள் 24 மணி நேரத்திற்குள் அழித்து அகற்றப்பட வேண்டும்.
பொது வளாகம், கட்டிடங்களில் பேருந்து நிறுத்தம், ரயில்வே நிலையம், பாலங்கள், மின்கம்பங்கள், உள்ளாட்சிக்குட்பட்ட கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை 48 மணி நேரத்திற்குள் அழித்து அகற்றப்பட வேண்டும.
தனியார் வளாகம் கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் சுவர் விளம்பரங்கள் கட்சி கொடிகள் 72 மணி நேரத்திற்குள் அழித்து, அகற்றப்பட வேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 77(1)ன் படி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் அவருடைய பெயரிலோ அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட முகவரின் பெயரிலோ தேர்தல் செலவினங் களுக்கென்று தனியே ஒரு வங்கி கணக்கு துவக்கிட வேண்டும். இந்த கணக்கில் அவர் வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நாள் வரையிலான காலங்கள் வரை பொருந்தும்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவின் படி போஸ்டர்கள், துண்டு கடிதங்கள் சீட்டுகள், விளம்பரங்கள் என அனைத்திலும் அதனை அச்சிட்டு வெளியிடும் அச்சகத்தின் பெயர் கட்டாயமாக இடம் பெற வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 177(ர்)ன் படி எவரேனும் ஒரு வேட்பாளாரின் எழுத்து மூலமான பொது அல்லது சிறப்பு அனுமதியின்றி ஏதாவதொரு பொதுக்கூட்டம் நடத்துவதற்காக செலவு செய்தால் அல்லது செலவை அனுமதித்தால் அன்னார் அபராதத்துடன் தண்டிக்கப்படுவார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான தேர்தல் ஆலோசனை கூட்டம். தங்கும் விடுதிகள், அச்சக உரிமையாளர்கள், தனியார் வங்கியாளர்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கூட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தென்காசி காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கூறுகையில் தென்காசி மாவட்டத்தில் 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது இவற்றில் இரண்டு சோதனைச் சாவடிகள் தமிழகத்தின் எல்லை பகுதியான புளியரை மற்றும் மேக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் காவல்துறை அணிவகுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.